பிரித்தானியாவின் தற்போதைய கோவிட் - 19 நிலவரம்! வெளியாகியுள்ள அறிவிப்பு
பிரித்தானியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 6,040 பேர் பாதிக்கப்பட்டதோடு 158 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கோவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக பிரித்தானியா காணப்படுகின்றது.
இதுவரை 4,213,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 124,419 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 889,359 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 1,542 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 3,199,565 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் கோவிட் பாதிப்பு குறைந்துள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தம் 22,887,118 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
1,090,840 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரித்தானிய சுகாதாரத் துறையினர் கருத்து வெளியிடுகையில், “பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாகவே கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இதுவரை பிரித்தானியாவில் 2 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியாவில் பிரேசில் வகை உருமாறிய கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.