பிரித்தானியாவின் கோவிட் -19 நிலவரம்! ஸ்கொட்லாந்திலும் தளர்வுகள் அறிவிப்பு
பிரித்தானியாவில் சுமார் 18 மில்லியன் மக்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மேலும் 548 கோவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், 8,489 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் - 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 121,305 உயர்ந்துள்ளது. அத்துடன் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4,134,639 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கோவிட் - 19 வைரஸ் தொற்று தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை இப்போது 17,916,181 ஆக உயர்ந்துள்ளது. 642,788 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் கோவிட் - 19 கட்டுப்பாடுகளில் தளர்வை கொண்டுவரும் நோக்கில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நான்கு அம்ச திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன்படி, பிரித்தானியாவில் அமுலில் உள்ள அனைத்து கோவிட் - 19 வைரஸ் கட்டுப்பாடுகளும் ஜூன் 21 க்குள் நீக்கப்படலாம் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, கடைகள், பார்கள், உணவகங்கள், ஜிம்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்களை மீண்டும் திறப்பது ஏப்ரல் 26ம் திகதி முதல் தொடங்கும் என்று ஸ்கொட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 5ம் திகதி வீட்டுக் கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மார்ச் 15ம் திகதி முதல் இரண்டு வீடுகளைச் சேர்ந்த நான்கு பேர் வெளியில் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்” எனவும் அவர் கூறியுள்ளார்.