பிளான் - B கட்டுப்பாடுகளை நோக்கி நகரும் பிரித்தானியா! போரிஸ் ஜோன்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரித்தானியாவில் ஒமிக்ரோனின் தாக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில் Plan-B-ஐ நோக்கி நகரவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் திங்கள் முதல் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை மீள அமுல்படுத்தப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ், உலகில் சுமார் 39 க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக பிரித்தானியாவில் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகின்றது.
தற்போது வரை ஒமிக்ரோன் தொற்றினால் மட்டும் 568 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படும் நிலையில்,பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய,தேவைப்பட்டால் மட்டுமே வேலைக்கு செல்லுமாறும், முகக்கவசம் கட்டாயம் அணிவது பல இடங்களில் நீட்டிக்கப்படும், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இரவு விடுதிகள் போன்ற ஏராளமான மக்கள் கூடும் இடங்களில், கோவிட் பாஸ் கட்டாயமாக்கப்படும். தனிமைப்படுத்துதலுக்கு பதிலாக, தினந்தோறும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நாம் இன்னும் வேகமாக செல்ல வேண்டும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.