அலெக்ஸே நவால்னி விவகாரம்! - ஏழு பேருக்கு தடை விதித்தது பிரித்தானியா
ரஷ்ய எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவையின் ஏழு உறுப்பினர்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.
இதன்படி, குறித்த ஏழுபேர் தொடர்பில் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகளையும் பிரித்தானியா விதித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில்,
“ரஷ்ய அரசாங்கத்தின் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது சர்வதேச சட்டத்தை மீறுவதாக நாங்கள் தெளிவான செய்தியை அனுப்புகிறோம். மேலும் வெளிப்படையான குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
‘நோவிச்சோக்’ நரம்பு இரசாயன நஞ்சு தொடர்பான முழுப் பங்கை அறிவிக்குமாறு நாங்கள் ரஷ்யாவை வலியுறுத்துகிறோம்’ என தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது.
சைபீரியாவின் டாம்ஸ்கில் இருந்து மொஸ்கோவுக்குச் செல்லும் விமான பயணத்தின்போது நவால்னி மயங்கி விழுந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோமா நிலையில் இருந்த நவால்னி அவசர சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார்.
நவால்னிக்கு 'நோவிசோக்' என்கிற, விஷம் கொடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறினர். ‘நோவிச்சோக்’ என்பது பனிப்போரின் போது சோவியத் ஒன்றிய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இரசாயன நஞ்சு ஆகும்.
இது தசைகளை முடக்குகின்றன மற்றும் மூச்சுத்திணறல் மூலம் மரணத்திற்கு வழிவகுக்கும்.
ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தீவிர விமர்சகரும், எதிர்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவால்னிக்கு கடந்த ஆண்டில் நோவிசோக் என்ற இரசாயன நஞ்சு அளிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்குச் சென்றார்.
இதன்பிறகு கடுமையான சிகிச்சைக்கு பிறகு மீண்ட நவால்னி, கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யாவுக்கு திரும்பிய போது பழைய பணமோசடிக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.