போர்த்துகலில் கொடூரக் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய சிறுவன்
போர்த்துகலின் மத்திய பகுதியில் உள்ள தோமர் நகரில், ஆல்பை ஹாலட் (Alfie Hallett) என்ற 13 வயது பிரித்தானிய சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம்(23) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, அந்த சிறுவனின் தாயும் கடுமையாகத் தாக்கப்பட்டு, கட்டப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இந்தகொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் தாயின் முன்னாள் காதலன் (போர்த்துகல் பிரஜை), பின்னர் ஒரு எரிவாயு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தாயின் முன்னாள் காதலனின் கொடூரச் செயற்பாடுகள்
அந்த நபர் ஏற்கனவே ஒரு கொலைக் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பதும், அந்த குடும்பம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் குடும்ப வன்முறைப் முறைப்பாடு அடிப்படையில் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஆல்பை ஹாலட் ஒரு தீவிர கூடைப்பந்து விளையாட்டு வீரர் என்பதுடன், அவர் விளையாடிய உள்ளூர் கூடைப்பந்து கழகம் அவருக்கு உருக்கமான அஞ்சலியைச் செலுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அவர் விளையாடிய கடைசி ஆட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்ததாக அக்கழகம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
காயமடைந்த சிறுவனின் தாய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலகம் போர்த்துகல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.