பிறிக்ஸ் மாநாட்டு முடிவுகளும் இலங்கையின் எதிர்பார்ப்பும்
உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில், ஆறு நாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்துள்ளன. இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிறிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும்.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதை எவரும் மறுப்பதற்கில்லை. பிரேசில், ரசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிறிக்ஸ்.
சென்ற இருபத்து நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் தென்னாபிரிக்கத் தலைநகர் ஜோஹன்ஸ்பெர்க்கில்; இடம்பெற்ற பதினைந்தாவது உச்சி மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை பிறிக்ஸ் கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் உறுப்பு நாடாகச் சேர்க்கப்படாமை இந்தியாவுக்குப் பெரும் ஆறுதல். ஆனாலும் ஏனைய தீர்மானங்கள் சிலவற்றில் முரண்பாட்டோடு இந்தியா இணங்கியுள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய முகம் இருந்தாலும், பாகிஸ்தான் அமெரிக்கச் சார்பு நிலையில் செயற்படுவதைச் சீனா விரும்பவில்லை.
இந்தியாவின் பரிந்துரை
இது பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் இந்தியாவுக்குச் சாதகமான தன்மையை உருவாக்கியிருக்கிறது. பிறிக்ஸ் கூட்டமைப்பில் இருந்து இந்தியாவை வெளியே எடுப்பதற்குரிய பல விமர்சனங்களை மேற்கு மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் பகிரங்கமாகக் கடந்த ஒருமாதமாக முன்வைத்து வந்தன.
ஆனால் ரசிய - இந்திய உறவு பிறிக்ஸ் கூட்டமைப்பில் இருந்து இந்தியாவை வெளியே எடுக்க முடியாத சூழலை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் பிறிக்ஸில் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை உறுப்பு நாடுகளாக சேர்க்க ரசியாவும் சீனாவும் வகுத்த தந்திரோபாயத்திற்குப் பதிலாக, இந்தியா வேறு பரிந்துரைகளை வழங்கியிருந்தது.
அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் பிறிக்ஸில் இணைந்து விடக்கூடாது என்ற சிந்தனை இந்தியாவுக்கு இருந்தாலும் பாகிஸ்தான் இணைந்து விடக்கூடாது என்பதில் மாத்திரமே இந்தியா கூடுதல் கவனத்தைச் செலுத்தியிருந்தது.
இந்தியாவின் இந்த உள்ளக்கிடக்கையை அறிந்து கெண்ட ரசிய சீன அரசுகள் குறிப்பாகச் சீன அரசு, பாகிஸ்தானைத் தற்காலிகமாக விலக்கி எண்ணெய்வள நாடுகளை பிறிக்ஸில் இணைக்க முடிவு செய்திருக்கிறது.
இதனாலேயே இந்திய நிலைப்பாடு இறுதி நேரத்தில் மாற்றமடைந்து பிறிக்ஸ் கூட்டமைப்பின் பல தீர்மானங்களுக்கு புதுடில்லி உடன்பட்டிருப்பதாக ஒன்இந்தியா என்ற ஆங்கில இணையத்தளம் விபரித்துள்ளது.
பிறிக்ஸ் கூட்டமைப்பை வெற்றிகொள்ள முடியாது
பிறிக்ஸ் மாநாடு ஒரு முக்கியமான புவிசார் அரசியல் காலகட்டத்தில் நடந்துள்ளது. ரசிய உக்ரெய்ன் போர், ரசிய - அமெரிக்க மோதல், அமெரிக்க - சீன மோதல் ஆகியவற்றுக்கு மத்தியிலும் கோவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர் முதன் முறையாக நேரிலும் இந்த மாநாடு இடம்பெற்றிருக்கிறது.
அத்துடன் பிறிக்ஸ் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இந்தியாவின் சந்திராயன் நிலவில் கால் பதித்திருக்கிறது. பிறிக்ஸ் மாநாட்டை குழப்பவும் இந்தியாவை பிறிக்ஸில் இருந்து வெளியே எடுக்கும் நோக்கிலும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும் முயற்சிகள் எடுத்திருந்த நிலையில், இந்தியாவின் சந்திராயன் நிலவில் கால்பதித்தைச் சீன அரசின் குளோபல்ரைம்ஸ் ஆங்கில செய்தித் தளம் பாராட்டியுள்ளது.
அத்துடன் சீனா ரசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைப் பிரதான மையமாகக் கொண்ட பிறிக்ஸ் கூட்டமைப்பை அமெரிக்காவினால் வெற்றிகொள்ள முடியாது என்ற தொனியிலும் அந்த செய்தித் தளம் விமர்சித்துள்ளது. ரசியா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசா பிறிக்ஸ் மாநாட்டின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டதாக ஜியோபொலிற்றிக்கல்மிரர் (geopoliticalmonitor) என்ற ஆங்கில ஆய்வுத் தளம் கூறுகிறது.
அதேநேரம் எண்ணெய்வள நாடுகள் பிறிக்ஸில் இணைவது பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு உதவியாக இருக்குமென ரைம்ஸ்ஒப்இந்தியா (timesofindia.indiatimes) நம்புகிறது. ஏறாத்தாள இந்தியாவைத் தவிர்த்து பிறிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் அமெரிக்கா எதிர்ப்புத் தன்மை கொண்டவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எதிர்வரும் காலங்களில் பிறிக்ஸ் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் புதிய நாணயத்தைப் பயன்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கவுள்ளன. இது அமெரிக்க டொலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும். இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டொலருக்குப் பதிலாக பிறிக்ஸ் நாணயத்தில் கொள்வனவு செய்யப்படும்.
சீனாவுக்கும் ரசியாவக்கும் இது எழுச்சியையும் கொடுக்கும். இதனால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
எண்ணெய்வள ரீதியாக பிறிக்ஸ் நாடுகள் உலக நாடுகளை கட்டுப்படுத்துவதோடு பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகளை பிறிக்ஸ் நாடுகள் இனிக் கட்டுப்படுத்தும் நிலை உருவாகும்.
முக்கியமாக பிறிக்ஸ் நாடுகளின் இந்த முடிவு மேற்கு உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். முன்னர் ஐந்து உறுப்பு நாடுகளாக இருந்து தற்போது பதினொரு உறுப்பு நாடுகளாக விரிவடைந்துள்ள பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணைவதற்கு மேலும் இருபத்து மூன்று நாடுகள் விண்ணப்பித்துள்ளன.
இவை பரிசீலிக்கப்பட்டு அடுத்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படுமானால், மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இது பெரும் சவாலாகவே அமையும் என்பது பகிரங்கம். இப் பின்னணியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய முகம் கொண்ட இந்தியாவின் நிலைப்பாடு ரசிய - சீன கூட்டுக்குள் நிரந்தரமாக மட்டுப்படுத்தப்படுமா அல்லது மேற்கு ஐரோப்பிய முகம் தொடர்ந்து நீடிக்குமா என்பதைத் தற்போதைக்கு அனுமானிக்க முடியாது.
பாகிஸ்தான் பிறிக்ஸில் இணைய விரும்பியுள்ளது. பாகிஸ்தான் அமெரிக்கச் சார்பு நிலையில் இருந்தாலும் பாகிஸ்தானைத் தன் பக்கம் ஈர்க்க முடியுமெனச் சீனாவுக்கும் நம்பிக்கை உண்டு. ஆகவே சீனாவுடன் எல்லைப் பிரச்சினையில் சிக்குண்டுள்ள இந்தியா, பிறிக்ஸ் மற்றும் ரசிய உறவு போன்ற காரணங்களின் அடிப்படையில் சீனாவுடன் முரண்பாட்டில் உடன்பாடாக ஒத்துச் செல்லுதல் என்ற புதிய கோட்பாட்டை வகுத்துள்ளது.
ஆனாலும் அமெரிக்க முகம் கொண்ட இந்தியாவினால் சீனாவுடன் எவ்வளவு காலத்துக்கு ஒத்துச் செல்ல முடியும் என்ற கேள்விகள் இல்லாமலில்லை. பாகிஸ்தான் பிறிக்ஸில் இணையுமாக இருந்தால் நிச்சியம் இந்தியா. பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் முரண்படும். அல்லது இந்தியாவை பிறிக்ஸில் இருந்து முற்றாக வெளியேற்றும் வியூகங்களை அமெரிக்கா தீவிரப்படுத்தும்.
பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் இந்தியா மேலோங்க வேண்டும்
இந்தியாவின் மிகச் சமீபத்திய இரட்டை நிலைப்பாடு மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளினால் பிறிக்ஸ் பற்றிச் சந்தேகிக்க ஒரு காரணமாக அல்லது பிறிக்ஸ் கூட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு முக்கிய புள்ளியாகப் பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் கடந்த பதினேழு வருடங்களாக பிறிக்ஸ் வளர்ச்சியடைந்து வருகின்றது.
இது பிறிக்ஸ் கூட்டமைப்பிற்குள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வெற்றிகரமான ஒருங்கிணைப்பு மற்றும் கருத்தொற்றுமையை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக குளோபல்ரைமஸ் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவும் இந்தியாவும் ஒருவரையொருவர் எதிர்க்கவோ அல்லது தடுக்கவோ மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளினால் தயாரிக்கப்பட்ட பல புனைகதைகள் எதுவுமே பயனற்றுப் போயுள்ளது என்றும் அச் செய்தித் தளம் விபரிக்கிறது.
பிறிக்ஸ் மாநாட்டின் பின்னர் சீன ஊடகங்கள், சீன - இந்திய முரண்பாட்டை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது புரிகிறது. இந்திய எல்லைகளில் சீனாவுடன் ஏற்படும் சர்ச்சைகளுக்கு விரைவில் சுமூகமாகத் தீர்வு காணக்கூடிய ஏற்பாடுகள் இருப்பதாக குளோல்ரைம்ஸ் செய்தித் தளம் கூறுகிறது.
இந்திய ஊடகங்களும் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் இந்தியா மேலோங்க வேண்டும் என்றும் வாழ்த்துகின்றன. சீன - ரசிய உறவின் மூலமாக சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் பொருளாதாரம் உயர்வடையும் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் நம்புகிறது. ஆகவே இப் பின்னணியில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் இந்தியத் தீர்மானம் வகுப்போரும் மேற்கு ஐரோப்பிய முகத்தைத் தொடர்ந்தும் பேண முடியுமா அல்லது வேறு மாற்று வியூகங்கள் மூலமாக அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் நகர்வுகள் கையாளப்படுமா என்பதை பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டும்.
இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இனிமேல் அமெரிக்கா மாத்திரமே எதிரி என்றும், இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினை மாத்திரமே இருப்பதாகவும் பிறிக்ஸ் மாநாட்டின் பின்னர் சீன ஊடகங்கள் கிண்டலாகவும் வர்ணிக்கின்றன. இந்த இடத்தில் பிறிக்ஸ் கூட்டமைப்பில் இலங்கையும் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் தீவிர பௌத்த தேசியவாதியுமான உமதகம்பன்பில ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சென்ற வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா ஊடாக பிறிக்ஸ் பொருளாதாரக் கொள்கைக்குள் இலங்கையும் இணையும் என்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த அரசியல் பத்தியில் ஏறங்கனவே விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆனால் உதயகம்பன்பிலவின் கோரிக்கை என்பது சீனாவின் மேலதிக்க வளர்ச்சியின் பின்னணியைக் கொண்டது உதயகம்பன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமயக் கட்சியும் அந்தக் கட்சியில் அங்கம் வகிக்கும் பௌத்த குருமாரும் மற்றும் மகாநாயக்கத் தேரர்களும் ஒருபோதும் இந்தியாவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பது பட்டவர்த்தனம்.
உதயகம்பன்பிலவின் கொள்கையோடுதான் மகாநாயகத் தேரர்களும் பயணிக்கின்றனர் என்பதும் பகிரங்கம் ஆகவே பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் இலங்கை இணைய வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னால் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியத் தலையீட்டைத் தடுத்தல் மற்றும் இலங்கைத்தீவில் அதுவும் வடக்குக் கிழக்கில் சீனத் தளங்களுக்கு இடமளிக்கும் தந்திரோபாயங்களே அதிகமாகவுள்ளன.
தமிழர் விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்களும் மகாநாயகத் தேரர்களின் கோரிக்கைகளைத் தட்டிக்கழிக்கும் நிலையில் இல்லை என்பதும் நிதர்சனம். ஈழத்தமிழர்களின் எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்டங்களின்போது எடுக்கப்பட்ட தீர்வு முயற்சிகள் குழம்பிய பின்னணியும் எவருக்கும் புரியாததல்ல.
அதேநேரம் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பலவீனமான அரசியல் பொருளாதாரச் செயற்பாடுகளும் ஜீ 07 நாடுகளின் மத்தியில் எழுந்துள்ள முரண்பாடுகளும் தொடர்ந்து நீடிக்குமானால் பிறிக்ஸ் கூட்டமைப்பில் சீன - ரசியக் கூட்டு வலுப்பெற்று அதற்குள் இந்தியா முழுமையாக முடங்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.
ஆனாலும் பிறிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் பற்றிய செயற்பாடுகளின் பின்னணியில் மாறவுள்ள உலக அரசியல் ஒழுங்கும் மற்றும் ரசிய உக்ரெய்ன் போர், அமெரிக்க - ரசிய மோதல், அமெரிக்க - சீன மோதல் போன்ற புவிசார் அரசியல் - பொருளாதார மற்றும் இராணுவ வியூகங்களின் வேகங்களுக்கு மத்தியில் இந்திய நிலைப்பாடு என்னவாக அமையும் என்ற கேள்விகள் உலக அரங்கில் இன்னமும் தொடருகிறது.
இப் பின்னணியில் சிறிய நாடான இலங்கைத்தீவு பௌத்த தேசியக் கட்டமைப்புக்குரிய நன்மைகளைப் பெறலாம். அந்த நன்மைகள் ஊடே வடக்குக் கிழக்கில் ஈழத்தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை சீன - இந்திய அரசுகள் தத்தமது தேவைக்கு ஏற்ப பகிர்ந்துகொள்ளும் ஆபத்துக்களும் விஞ்சிக் காணப்படுகின்றன.
தமது நலன் அடிப்படையில் வடக்குக் கிழக்கில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு இந்த வல்லாதிக்க நாடுகள் தொடர்ந்தும் இடமளிக்கலாம் என்ற தகவல்களும் உறுதியாகியுள்ளன. கொழும்பில் கஜேந்திரகுமாரின் வீட்டின் முன்பாக பௌத்த குருமார் நடத்திய போராட்டம் குறித்து சிங்கள கட்சிகள்கூடக் கண்டிக்கவில்லை.
சிங்கள ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிடவில்லை. கொழும்பில் உள்ள அமெரிக்க இந்திய, சீனத் தூதரங்கள் கூடக் கண்டிக்கவில்லை. அதேநேரம் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க வியூகங்களைத் தடுக்க ஒட்டுமொத்த இலங்கைத்தீவும் சீன - இந்திய அரசுகளின் ஏட்டிக்குப் போட்டியான அதுவும் புது வகையான உத்திகளுக்குள் முடங்கும் ஆபத்துக்களும் தென்படுகின்றன.
இது பௌத்த சிங்களத் தேசியவாதம் எதிர்பார்க்கும் "இலங்கை ஒற்றையாட்சி இறைமைக் கோட்பாட்டை"கேள்விக்குள்ளாக்கும் என்பதிலும் ஐயமேயில்லை.
ஆகவே இப்புவிசார் அரசியல் - பொருளாதார வியூகங்களும் போட்டிகளும் ஈழத் தமிழர்களை ஒருமித்த குரலில் ஒரு தேசமாகத் திரள வேண்டிய கட்டாயத்தைக் கன கச்சிதமாகக் காண்பிக்கிறது.