சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை புறக்கணிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை!
இந்திய ஐபிஎல் கிரிக்கட் போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ரசிகர்கள் டுவிட்டரில் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
கிரிக்கட் இணையத்தளங்களிலும் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நான்கு முறை ஐபிஎல் போட்டிகளில் வெற்றியாளராகிய சென்னை சுப்பர் கிங்ஸை புறக்கணிக்கவேண்டும் என்று ரசிகர்கள் பதிவுகளை செய்து வருகின்றனர்.
#MaheeshTheekshana is not only a Sinhala cricketer but also a former Sinhala soldier ??#Boycott_ChennaiSuperKings#DontNormaliseTamilGenocide#RemoveSinhalesePlayerFromCSK https://t.co/uvdlDbVBgT
— Suray ?? (@SurayTamil) February 14, 2022
ஐபிஎல்லுக்கான வீரர்கள் மிகப்பெரிய ஏலத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவை சென்னை சுப்பர் கிங்ஸ் ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளமையை அடுத்தே இந்த எதிர்ப்பு காட்டப்பட்டு வருகிறது.
இலங்கை கிரிக்கட் அணியில் விளையாடும் மகேஸ் தீக்க்ஷன, இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் உறுப்பினர் என்ற காரணத்தை முன்வைத்தே இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவ உறுப்பினர்கள் போர்க்குற்றம் இழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதே இராணுவத்தின் உறுப்பினர் ஒருவரை தமிழகத்தின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினர் உள்வாங்கியுள்ளமைக்கு ஆட்சேபம் தெரிவித்தே இந்த சமூக வலைத்தள எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இலங்கையின் செய்தித்தாள் ஒன்றில் கடந்த வருடம், செவ்வியொன்றை வழங்கியிருந்த தீக்ஷன, போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, தமது முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தார் என்று தெரிவித்திருந்தார் என்ற விடயமும் இணையத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஜெயராம், இந்த விடயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளை ரசிகர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.
இலங்கை அணியின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் எந்தவொரு ஐபிஎல் போட்டிகளும் தமிழகத்தில் இடம்பெறக்கூடாது என்று ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்திருந்தார் என்பதையே ரசிகர்கள் கோடிட்டுள்ளனர்.



