யாழில் ஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுவன் - சம்பவத்தை மூடிமறைக்க நிர்வாகம் சதித்திட்டம்!
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவச் சிறுவர் இல்லத்தை சேர்ந்த மாணவரை அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கியதில், மாணவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவச் சிறுவர் இல்லத்தை சேர்ந்த மாணவரை அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளார் என்றும் இந்த சம்பவத்தை மறைக்கும் விதமாக மாணவரை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
சைவச் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு இரவு நேர கற்பித்த நடவடிக்கைக்காக ஆசிரியர் ஒருவர் , இல்லத்தின் முகாமைத்துவ சபையின் அனுமதியின்றி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கல்வித்திட்ட பணிப்பாளரின் பரிந்துரையின் கீழ் இல்லத்திற்கு முறையற்ற விதத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரின் தவறான நடத்தைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முகாமைத்துவ சபையின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் முன் வைத்து வந்த போதிலும், அதனை சங்க தலைவர் உள்ளிட்டவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதி
இந்த நிலையில் , குறித்த ஆசிரியரினால் மாணவர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இருப்பினும், மாணவர், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படாமல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளார்.

அரச வைத்தியசாலையில் மாணவரை அனுமதித்தால் , சட்ட நடவடிக்கைளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற காரணத்தால், தனியார் வைத்தியசாலையில் மாணவரை அனுமதித்து சம்பவத்தை மறைக்க திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மாணவன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு, பொலிஸார் ஊடாக சிறுவர் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டு இருக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்க மறுக்கும் நிர்வாகம்
ஆனால் அவை தொடர்பில் சைவ வித்தியா விருத்தி சங்க நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கு தெரிந்தும் மாணவர் மீதான தாக்குதல் குறித்து விசாரணைகளையோ , நடவடிக்கைகளையோ எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்ட முறைமை தவறு என்றும் கோரி வித்தியா விருத்திச் சங்கத்தின் பொதுச் சபை செயலாளரை நிர்வாகத்தை சேர்ந்த சிலர் தாக்க முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், மாணவன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை திணைக்களம், சிறுவர் நீதிமன்று, வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட தரப்பினர் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், சம்பவம் தொடர்பில் உரிய தரப்பினருக்கு முறைப்படி கடிதம் மூலம் முறைப்பாடுகளை வழங்க வேண்டும் என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.