இடிந்து வீழ்ந்த மதில் சுவர்! 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த அவலம்
பலாங்கொடை- பங்கியாவத்த பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாப உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(21.11.2026) இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு அருகில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் குறித்த சிறுவன் நின்றுகொண்டிருந்த போது, அந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
அதற்குள் அச்சிறுவன் சிக்குண்டு இருப்பதை சிறுவனின் தாயார் அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக முச்சக்கரவண்டியொன்றின் மூலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.