கழுத்தில் கயிறு இறுகியதால் உயிரிழந்த சிறுவன்
வீட்டில் கட்டப்பட்டிருந்த கயிறு கழுத்தில் இறுகி 11 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
பாரதி வீதியை சேர்ந்த 11 வயதுடைய மதிவாணன் ஜனுசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணத்தின் பின்னணி
வீட்டின் முன்பகுதியிலுள்ள விறாந்தையின் கூரையில் பொருட்களை நிறுப்பதற்கான தராசுக்காக நயிலோன் கயிறு கட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று மாலை 5 மணிக்கு தாயார் வீட்டினுள் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். இதன்போது, தனிமையில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் குறித்த கயிற்றில் கழுத்தை உள்நுழைத்து விளையாடியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இதனையடுத்து, கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நீதிமன்ற அனுமதியை பெற்று சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு.போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைளை மட்டு.தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.