கந்தளாய் பரட்டைக்காட்டு வயல் பகுதியில் போத்தல்களால் குப்பை மேடாகும் அபாயம்!
கந்தளாய்- பேராற்று வெளி பரட்டைக்காட்டுப் பகுதிகளில் வயல்வெளிகள் மற்றும் மனிதர்கள் நடமாடும் பாதைகள் நச்சுக் கழிவுகளால் நிறைந்து, உழைப்பாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கிருமிநாசினி போத்தல்களை அப்பகுதி விவசாயிகளே உடைத்து வீசுவது அதிகரித்துள்ளது.
குறித்த ஓரிடத்தில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட கிருமிநாசினி மற்றும் மதுப் போத்தல்கள் உடைந்து குப்பையாகக் குவிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் கவலை
இந்த அஜாக்கிரதையான செயலால் வயல்வெளிகள் குப்பை மேடாக மாறி வருகின்றன. வீதிகளில் சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துண்டுகள், வயல் வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் கால்நடைகளின் பாதங்களில் குத்தி, கடுமையான காயங்களை ஏற்படுத்துகின்றன.

இதுமட்டுமின்றி, இந்தப் பகுதிக்கு வரும் போதைப்பாவனையாளர்களும் மது அருந்திவிட்டு போத்தல்களை உடைத்து வீசுவதால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
இதனால், தங்களது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து, உள்ளூர் விவசாயக் குழுக்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சுகாதாரத் துறை மற்றும் பிரதேச செயலகம் உடனடியாகத் தலையிட்டு, இந்தக் குப்பைகளை அகற்றுவதுடன், போத்தல்களை வீசுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டுமெனப் பரட்டைக்காட்டுப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.