கோவிட் விதிமுறைகள் மீறல் - பிரித்தானிய பிரதமருக்கு அபராதம்
கோவிட் கட்டுப்பாடுகளின் போது ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதற்காக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்து ஜூன் 19, 2020 அன்று பிரதமர் அலுவலகத்தில் நிறுவப்பட்ட அமைச்சரவை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், அபராதம் செலுத்தியதை பிரதமர் உறுதிப்படுத்தினார்.
மேலும் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் பிரதமரின் மனைவி கேரி ஜான்சன், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமைக்காக அபராதம் செலுத்தியதை உறுதிப்படுத்தினார்.
கோவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானியாவில் முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர்.
இந்நிலையில், குறித்த கால்பகுதியில் லண்டனில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மது விருந்தில் பிரதமர் போரிஸ் ஜோன்சன், நிதி அமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்த நாட்டு மக்களும் கொரோனா தொற்றுக்கு பயந்து வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்த நிலையில், பிரதமர் மது விருந்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை அடுத்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் விதிகளை மீறியதற்காக பிரதமர் போரிஸ் ஜோன்சன், நிதி அமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்டவர்களுக்கு அபராதம் விதித்திருந்தது.
இந்நிலையில், அபராதம் செலுத்தியதை பிரதமர் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்திற்கு போரிஸ் ஜோன்சன் மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும், தான் பதவி விலகப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்