சூடுபிடிக்கும் பிரித்தானிய தேர்தல் களம்! சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் போரிஸ் ஜான்சன்
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் கோவிட் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளால் பதவி விலகி அவருடைய பொறுப்புக்கு லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், பிரித்தானியாவில் ஏற்பட்ட கடும் பணவீக்க நெருக்கடி காரணமாக மூன்று மாதங்களில் பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் இராஜினாமா செய்தார்.
புதிய பிரதமர் தேர்வு
இதையடுத்து நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் முன்னணியில் ரிஷி சுனக், பென்னி மோர்டான்ட், போரிஸ் ஜான்சன் போன்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய நபர்கள் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுவரை பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடுவதாக எந்த தலைவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.க்கள் ஆதரவு
இதற்கமைய, இதுவரை கிடைத்த நிலவரப்படி இந்திய வம்சாவளி ரிஷி சுனக் 45 எம்.பி.க்கள் ஆதரவையும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் 24 எம்.பி.க்கள் ஆதரவையும், பெண் தலைவரான பென்னி மார்டண்ட் 17 எம்.பி.க்கள் ஆதரவையும் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரித்தானிய பிரதமர் போட்டியில் இருந்து தான் விலகுவதாகவும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தான் ஆதரவு வழங்க இருப்பதாகவும் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சமீபத்தில் பதவி விலகிய இந்திய வம்சாவளி உள்துறை மந்திரி சூவெல்லா பிரேவர்மன், சர்வதேச வர்த்தகக மந்திரி கெமி படேனோச், இராணுவ மந்திரி பென் வாலஸ் பெயர்களும் போட்டியாளர்களின் பெயர்களில் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தற்போது எதிர்வரும் திங்கட்கிழமை இரவு அல்லது அடுத்த நாள் பகல், நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி அறிவிக்கவுள்ளது. இதில் ரிஷி சுனக் அல்லது போரிஸ் ஜோன்சன் நாட்டின் புதிய பிரதமராக தெரிவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.