பொண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு..! தாக்குதலாளியை மடக்கிய ‘கதாநாயகன்’ மீதான வழக்குகள் ரத்து
சிட்னியின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, கொடூரத் தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 'கதாநாயகனாக' போற்றப்பட்ட அகமது அல் அகமது மீதான வழக்குகளை அவுஸ்திரேலிய பொலிஸார் திரும்பப் பெற்றுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சிட்னியில் நடந்த யூத சமூக நிகழ்வில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
கொடூரத் தாக்குதல்
அப்போது, துப்பாக்கி ஏந்திய தாக்குதலாளியை உயிரைப் பணயம் வைத்து அகமது அல் அகமது தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்தார். இந்த மோதலில் அகமது பலத்த காயமடைந்தார்.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் தனது தந்தையுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புதன்கிழமை சிட்னி உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தந்தையுடன் 12 மாதங்களுக்குச் சில கட்டுப்பாடுகளுடன் சுமுகமாக நடப்பதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பொலிஸார் அவர் மீதான குற்றச்சாட்டுகளைத் திரும்பப்பெற்றுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அகமது, தான் இப்போது சுதந்திரமான மனிதன் என்றும் அமைதியை மட்டுமே விரும்புவதாகவும் தெரிவித்தார்.