பிணை முறி மோசடி வழக்கு குறித்து உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு
மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பிணை மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியும் என அறிவித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு பெர்துச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என மேல்நீதிமன்றின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரித்தீ பத்மன் சூரசேன, நீதியரசர்களான ஏ.எல். ஷிரான் குணரத்ன, அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபயசேகர ஆகியோரின் இணக்கத்துடன் நீதியரசர் மகிந்த சமயவர்தன இந்த உத்தரவினை வழங்கினார்.
பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் ஏனைய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்கை நடத்துவதற்கு எந்தவொரு சட்டரீதியான தடையும் இல்லை என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு 2016 மார்ச் 31 அன்று நடைபெற்ற திறைசேரி பிணைமுறி ஏலத்துடன் தொடர்புடையதாகும். இதில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஜெப்ரி அலோசியஸ் உட்பட 10 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் என்பது ஒரு நிறுவனமே தவிர, ஒரு தனிநபர் அல்ல என்பதால், அதற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை எழுப்பினர்.
இதனை ஏற்றுக்கொண்ட ட்ரையல்-அட்-பார் நீதிமன்றம், 2021 டிசம்பரில் ஏனைய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் முதலில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். இந்தத் தீர்ப்பின் மூலம், 2021 இல் தள்ளுபடி செய்யப்பட்ட பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் மீண்டும் உயிர்பெற்றுள்ளன.
நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வந்த பிணைமுறி மோசடி வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.