குண்டுத்தாக்குதலென தகவல் - வவுனியாவில் பரபரப்பு! பாடசாலைகளுக்கு தீவிர பாதுகாப்பு (Video)
வவுனியா நகரப் பகுதிக்குள் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய காவலாளியிடம் தெரிவிக்கப்பட்ட தகவலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்திற்கு இன்றையதினம் (25.05.2023) சென்ற இருவர் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்கு வைத்து இந்த பகுதிக்குள் இரண்டு குண்டுதாரிகள் நடமாடித் திரிவதாகவும், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் எனவும் கூறிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் உறுதிப்படுத்திய விடயம்
இந்த நிலையில் கடமையில் இருந்த காவலாளி குறித்த தகவலை பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாடசாலை அதிபரிடம் கேட்டபோது, பொலிஸார் என அடையாளப்படுத்திய இருவர் குறித்த தகவலை காவலாளியிடம் கூறிச் சென்றதை உறுதிப்படுத்தியிருந்தார்.
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. அத்துடன் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

