வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை (Video)
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் வாயில் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்றிரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பழைய பேருந்து நிலையப்பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையத்திற்கு முன்பாக முதியவர் ஒருவர் எவ்வித அசைவுமின்றி மரணமடைந்த நிலையில், காணப்படுவதாக வர்த்தகர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், 1990 அவசர நோயாளர் காவு வண்டிக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.
அதன் பின்னர் 1990 அவசர நோயாளர் காவு மூலம் அவ்விடத்திற்கு விரைந்த வைத்திய குழாமினர் வயோதிபரின் உடல் நிலையினை பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், அவரின் மரணத்தினை உறுதிப்படுத்தினர்.
குறித்த வயோதிபர் உடல் நல குறைவினால் மரணம் அடைந்தாரோ அல்லது யாரேனும் தாக்குதல் மேற்கொண்டு இறந்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த முதியவர் பழைய பேருந்து நிலையத்தில் தினசரி நடமாடி திரிபவர் என பொதுமக்கள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

