பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுப்பு
மட்டக்களப்பு - தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026.07.12ஆம் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில், காத்தான்குடி திசையிலிருந்து களுவாஞ்சிக்குடி திசையை நோக்கிப் பயணித்த CBY 1513 இலக்க காரும், எதிர்த்திசையிலிருந்து வந்த BBX 2573 இலக்க மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கடற்கரை வீதி, கிரான்குளம் எனும் முகவரியைச் சேர்ந்த 41 வயதான சர்வேஸ்வரன் கஜேந்தினி என்பவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்விபத்துத் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு, காரின் சாரதியான கிரான்குளம் 7, கிரான்குளம் முகவரியைச் சேர்ந்த 47 வயதான சத்திய சாயி வைத்தியசாலை வைத்தியரான சுந்தரலிங்கம் பிரதீபன் என்பவரை அன்றைய தினமே கைது செய்தனர்.
விசாரணை
பின்னர் 2026.07.13ஆந் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் BTC/MC/MT/ 3109/26 இலக்கத்தின் கீழ் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், இந்த வழக்கு மீண்டும் 2026.09.15 ஆந் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிடப்பட்டது.
காயமடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் 2026.07.21ஆந் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு வீட்டில் இருந்த வேளையில், இப்பெண்ணுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2026.08.07ஆந் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இப்பெண் 2026.08.11ஆந் திகதி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இவர் 05 நாட்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றிருந்தமையால், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரணச் சான்றிதழ் சமர்ப்பிப்பு
உறவினர்களால் சடலம் பொறுப்பேற்கப்பட்டு 2026.08.12ஆந் திகதி தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் மரணச் சான்றிதழை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதன்போது, விபத்து இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் மரணம் நிகழ்ந்தமை சந்தேகத்திற்குரியது எனவும், இந்த மரணமானது குறித்த வீதி விபத்தின் விளைவாக ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய பிரேத பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளுமாறும் கௌரவ நீதவான் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதியின் உத்தரவிற்கமைய குறித்த பெண்ணின் சடலம் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.தர்சினி முன்னிலையில் பொலிஸாரினால் தோண்டி எடுக்கப்பட்டது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri