இனியபாரதியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சடலங்கள்: தோண்டப்படும் மயானம்
இனியபாரதியால் கடத்திக் கொல்லப்பட்டோர் புதைக்கப்பட்டனர் என சந்தேகிக்கப்படும் தம்பிலுவில் மயானத்தை தோண்டும் பணிகள் நடாத்தப்பட்டுள்ளன.
இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டுக் காணாமல் போன 18 வயது மாணவன் பார்த்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த மயானத்தை இன்று(31.07.2025) வியாழக்கிழமை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கைகள்
ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் கடந்த 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
இதில் கைது செய்த இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டு வந்தவரும் இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த சபாபதி என்பவரும் கைது செய்யப்பட்டார்.
தம்பிலுவில் இந்து மயானம்
இதேவேளை, இனியபாரதியின் கைதினை தொடர்ந்து, அவரது முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சாகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் சபாபதி ஆகிய இனியபாரதியின் சகாக்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலையில் திருக்கோவில் - விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்த்தீபன், 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்ழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010 ஜனவரி 26ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு தம்பிலுவில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சி.ஜ.டியினர் கைது செய்யப்பட்டவர்களை தம்பிலுவில் இந்து மயானத்துக்குக் கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாப்படுத்தினர். இதற்கமைய, அங்கு மயானத்தை தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இவ்வாறு ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்ட பின்னர் மாலை குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.
மேலதிக தகவல் - சரவணன், ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










