தலைமன்னார்- ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3 ஆவது மணல் திட்டை நோக்கி படகு சேவை ஆரம்பித்து வைப்பு
உலக சுற்றுலா தின விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் முக்கியமான ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) காலை வெள்ளோட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் கலந்து கொண்டார்.
மேலும் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மன்னார் நகர பிரதேசச் செயலாளர் காந்தீபன் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டதோடு,பொலிஸார் மற்றும் கடற்படையினரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுற்றுலாத்துறை
மன்னாரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தலைமன்னார் கடற்கரையிலிருந்து 3 வது மணல் திட்டை நோக்கி குறித்த வெள்ளோட்ட ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ,மன்னார் நகர பிரதேச செயலாளர் காந்தீபன் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.
காலை 9 மணியளவில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து விசேட படகுகள் மூலம் 3 வது மணல் திட்டை நோக்கி பயணம் இடம் பெற்றது.
இரண்டாவது மணல் திட்டில் கடற் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் களைப்பறுவதற்கும், அதில் அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளைச் செய்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்புகள்
வட மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து தலைமன்னாரில் இருந்து விசேட படகுகள் மூலம் கட்டணம் செலுத்தி மூன்றாவது மணல் காட்டிற்குச் சென்று பார்வையிடுவதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த நடவடிக்கைகள் மூலம் தலைமன்னாரில் இருக்கின்ற சுய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, தங்களுடைய வருமானத்தைப் பெருக்க கூடிய வகையில் தொழில் வாய்ப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறித்த மணல் திட்டை பார்வையிடும் தினம் தொடர்பாக ஏற்பாட்டு குழுவினரால் அறிவித்தல் விடுக்கப்படும்.







