அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட படகின் உரிமையாளர் தப்பியோட்டம்
தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய 130 பொதிகளுடன் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகின் உரிமையாளர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து அண்மையில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை ஒன்றின் போது, தெற்கு கடற்கரையில் இருந்து 400 கடல் மைல் தொலைவில் போதைப்பொருட்களுடன் “இந்துனில் 6” என பெயரிடப்பட்ட பல நாள் கடற்றொழிலுக்கு பயன்படுத்தும் இழுவை படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.
இதன்போது, 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு 1300 மில்லியன் ரூபா என கண்டறியப்பட்டது.
(ஃ)பைபராலான படகு
இதன்பின்னர், முதற்கட்ட சோதனையில், சந்தேகப்படும் வகையில் எதுவும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து மேற்கொண்ட மேலதிக விசாரணையில் படகின் பல பகுதிகள் (ஃ)பைபரால் செய்யப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, ஜூன் 14ஆம் திகதி இரவு குறித்த படகு காலி (Galle) துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு விரிவான ஸ்கேன் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, (ஃ)பைபர் மூலம் சீல் வைக்கப்பட்ட பெட்டியில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
செயற்கைக்கோள் தொலைபேசி
மேலும், கடந்த மே மாதம் 15ஆம் திகதியன்றே தெவுந்துறையில் இருந்து குறித்த படகில் 6 பேரும் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், பிரபலமாக அறியப்பட்ட ஒருவரால் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இந்த போதைப்பொருட்களை அவர்கள் கடலில் வைத்து பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்த பயணத்துக்காக தங்களுக்கு ஆரம்ப கொடுப்பனவுகளாக 20,000 ரூபா முதல் 40 ஆயிரம் ரூபா வரை வழங்கப்படவிருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |