திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம்
“மகிழ்ச்சியான நாடு கிளீன் ஸ்ரீலங்கா கிராமம் தோறும்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டங்களை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் (26) மாபெரும் இரத்ததான நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார வழிகாட்டுதலுக்கமைய, மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உள்ளிட்ட நலன்புரி சங்க குழுவினரால் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், முப்படை, பொலிஸ், மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர். திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரிகள் மற்றும் குழுவினர் இரத்ததானம் பெறும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
இதன்போது அதிகளவானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இரத்த தானத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த இரத்ததான முகாமின் மூலம் பொது மருத்துவமனையின் இரத்த வங்கிக்குத் தேவையான இரத்தம் சேகரிக்கப்பட்டு, மனிதநேய சேவைக்கு மாவட்ட நிர்வாகம் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.

