தண்ணீரூற்று புனித மத்தியா ஆலயத்தில் இரத்ததான முகாம் (Photos)
வருடாந்த திட்டமிடல் நிகழ்ச்சிக்கேற்ப புனித மத்தியா ஆலயம் தண்ணீரூற்றில் இரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது.
இந்த இரத்த தான முகாம் இன்று (23.09.2023) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து முல்லைத்தீவு மாவட்ட சாரணர் ஆணையாளரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான நடராஜா ஜேம்சன் ஞானப்பொன்ராஜா கருத்து தெரிவிக்கையில்,
இந்த நிகழ்வில் 26 தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் பங்கெடுத்து இரத்த தானம் செய்திருந்தனர். இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கும் கொடையாளர் அளவு மிகவும் குறைவானதாக இருக்கின்றது.
பொது அமைப்புகளின் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்துகொள்ளும் செயற்பாடு குருதிக்கொடையாளர்களின் அளவினை அதிகரிக்கும். குறைந்தது நான்கு மாதங்களுக்கொரு முறை குருதிக்கொடை செய்யும் ஏற்பாட்டினை இலங்கை தேசிய இரத்த வங்கி செய்துள்ளது.
குருதிக்கொடையாளரின் குருதியானது நோய்களுக்கான சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு நோய்க்கிருமிகளற்ற தூய தன்மையை உறுதி செய்தபின்பே நோயாளிக்கு அது பயன்படுத்தப்படும்.
இதனால் குருதிக்கொடையாளர் தங்கள் நோய்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதனால் குருதிக் கொடையாளிப்பது இன்றைய சூழலில் எல்லோருக்கும் நன்மையானதொரு செயற்பாடு.
விபத்துக்கள் மற்றும் சத்திரசிகிச்சையின் போது அதிக குருதி தேவைப்படுகின்றது. அத்தோடு குழந்தை பிரசவிப்பு ,வைரசு நோய்களுக்காளானவர்களுக்கும் தலசீமியா நோயாளிக்கும் என குருதி தேவையுடையோர் பட்டியல் நீண்டு செல்வதனை நாம் அவதானிக்கலாம்.
ஆனாலும் தன்னார்வமாக குருதி கொடையளிக்கும் மனநிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகக்குறைவாகவே இருக்கின்றமை மாவட்ட இரத்த வங்கியினருடனான உரையாடலில் இருந்து அறிய முடிகிறது.
இறப்புக்களை குறைப்பதற்கு உதவி
இளையவர்கள் மத்தியில் குருதிக் கொடையாளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது. வைரசு சார்ந்த நோய் நிலைமைகளில் உடலில் குருதிச் சிறுதட்டுக்களின் அளவு வெகுவாக குறைந்து செல்லும். இதனால் டெங்கு போன்ற நோயாளருக்கு சிறுதட்டுக்களை மட்டும் பிரித்தெடுத்து மாற்றீடு செய்யும் சிகிச்சை முறை தற்போது உண்டு.
பிரசவிக்கும் தாய்மாருக்கும் குருதி அத்தியாவசிய தேவையை ஏற்படுத்தி விடுகிறது. விபத்துக்கள் அதிகம் நிகழும் இலங்கை போன்ற நாட்டுக்கு பொது தேசிய இரத்த வங்கி அமைப்பு உருவாக்கப்பட்டது குருதி பற்றாக் குறையினால் நிகழும் இறப்புக்களை குறைப்பதற்கு உதவியாக இருந்திருக்கிறது.இருந்து வருகின்றது.
ஆயினும் குருதி கொடையாளிப்பது சீரான ஒழுங்கில் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட இரத்த வங்கியின் வழமையான குருதிக்கொடையாளர்களில் ஒருவரான கவிஞர் நதுநசியிடம் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு YMCA திரிசாரணர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நோயாளர்
நலன்புரிச் சங்கத்தினர் இணைந்து இந்த தன்னார்வ குருதிக்கொடை நிகழ்வை ஏற்பாடு
செய்திருந்தனர்.
குருதியை முல்லைத்தீவு மாவட்ட இரத்த வங்கியினர்
பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.