சட்டவிரோத முதலீடுகளுடன் எனக்கு தொடர்பில்லை! கம்மன்பில முறைப்பாடு
திகோ குரூப் என்ற பெயரில் இயங்கிய மோசடி நிறுவனத்தில் தான் எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளவில்லை என்று உதய கம்மன்பில மறுத்துள்ளார்.
கொழும்பு உலகவர்த்தக மையத்தில் இயங்கிய திகோ குரூப் என்ற பெயரைக் கொண்ட முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தில் ஏராளமான அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிக,நடிகையர், மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்கள் , செல்வாக்குமிக்க பௌத்த பிக்குகள் என்று பல்தரப்பினரும் பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்தனர்.

கறுப்புப் பணம் முதலீடு
பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணத்தையே பல்வேறு தரப்பினரும் குறித்த கம்பனியில் முதலீடு செய்திருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் அவ்வாறு பாரிய தொகையொன்றை முதலீடு செய்துள்ளதாகவும்,சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.

இந்நிலையில் தான் அவ்வாறு எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளவில்லை என்றும், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்து உதய கம்மன்பில குற்றப்புலனாய்வுப் பொலிசாரிடம் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் தன்னைப் பற்றிய தகவல்களைப் பரப்பி வருவதாகத் தெரிவித்து வட்சப் இலக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் அவர் பொலிசாரிடம் கையளித்துள்ளார்.