திலினி பிரியமாலியிடம் முதலீடு செய்யப்பட்ட கறுப்பு பணம்-திரும்ப பெற முடியாத நிலையில் அரசியல்வாதிகள்
திக்கோ கூட்டு நிறுவனத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலியிடம் கோடிக்கணக்கான ரூபா பணத்தை வழங்கியவர்களுக்கு அந்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியாத ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பெண்ணின் வங்கிக்கணக்குகளில் பணமில்லை-விசாரணையாளர்கள்
சந்தேக நபரான இந்த பெண் மோசடி செய்துள்ளதாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள விசாரணைப் பிரிவினர், அந்த பணத்தில் பெருந்தொகை பணம் சந்தேக நபரிடம் இல்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
முதலீடு செய்யப்பட்ட பணத்தில் பெருந்தொகையான பணத்தை சந்தேக நபரான பெண் செலவு செய்துள்ளதாகவும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் வரை அவரது வங்கிக்கணக்குகளில் 300 கோடி ரூபாவுக்கும் மேல் வைப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும் அந்த வங்கிக்கணக்குகளில் பணம் எதுவும் இல்லை எனவும் குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கோடிக்கணக்கில் பணத்தை வழங்கியவர்கள் முறைப்பாடு செய்ய முன்வரவில்லை
திலினி பிரியமாலி என்ற பெண்ணிடம் இலங்கையின் அரசியல்வாதிகள் கோடிக்கணக்கான ரூபாவை வழங்கியுள்ள போதிலும் அது சம்பந்தமாக முறைப்பாடுகளை செய்ய அவர்கள் இதுவரை முன்வரில்லை எனவும் குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இந்த நிலையில், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் உட்பட பல முக்கிய புள்ளிகள் திலினி பிரியமாலியிடம் முதலீடு செய்ததாக கூறப்படும் கறுப்பு பணம், அவர்களுக்கு மீண்டும் கிடைக்காத நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
