ஈழத்தமிழர்களின் கறுப்பு ஜுலை தினம்: முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
அனைத்துலக தளத்தில் தமிழர்களின் பொருளாதார சக்தியை மையப்படுத்தி, வளப்படுத்த தமிழர்களுக்கான ஒர் வங்கியை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் கறுப்பு ஜுலை இனப்படுகொலை தினம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும்,
"ஜுலை 1983இல், இலங்கைத்தீவில் சிங்கள அரசின் துணை கொண்டு சிங்கள பேரினவாதம் தமிழர்கள் மீது இனப்படுகொலையினை நடாத்தியிருந்தது.
தமிழர் இனப்படுகொலை
இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடுரமாக கொல்லப்பட்டிருந்தனர். 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர். மில்லியன் கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. 1983, கறுப்பு ஜுலை நாட்களை ஓர் இனப்படுகொலையென இந்தியாவின் அன்றைய பிரதமர் மறைந்த இந்திரகாந்தி குறிப்பிட்டிருந்தார்.
அனைத்துலக நீதிபதிகள் ஆணையமும் இந்நாட்களை ஓர் இனப்படுகொலைக்கான செயலெனவே குறிப்பிட்டிருந்தது. இலங்கைத்தீவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பௌத்தத்தின் இரத்தம் தோய்ந்த கொடிய முகத்தினை 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை இனப்படுகொலை முதன்முறையாக உலகிற்கு அம்பலப்படுத்தியிருந்தது.
இலங்கைத்தீவில் தமிழர் தேசத்தின் மீதான அடக்குமுறையினை, இன வன்முறையினை இந்நாட்கள் உலகிற்கு எடுத்துக்காட்டியிருந்தன. 41 ஆண்டுகள் ஆகிவிட்டன.
புலம்பெயர் தமிழர்கள்
இதுவரை சிங்கள பௌத்த பேரினவாதம் இதற்கு பொறுப்புக்கூறவில்லை, மன்னிப்பு கோரவில்லை, இழப்பீட்டினை வழங்கவில்லை. மேலும் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள், அழிக்கபட்ட சொத்துகள் ஆகியன தொடர்பில் புள்ளிவிபரங்களையோ, முழுமையான வெள்ளை அறிக்கையினையோ இதுவரை வெளியிடவில்லை.
ஐ. நா மனித உரிமைச்சபையின் அண்மைய அறிக்கையில் 'இலங்கையிடம் பொறுப்புக்கூறாமை ஆழமாக புரையோடிப்போயுள்ளது' என குறிப்பிட்டுள்ளது. இதனை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மரபில் ஆழவேர் விட்டதொன்று எனலாம்.
1983, கறுப்பு ஜுலை , தமிழர்களை இலங்கைத்தீவினை விட்டு வெளியேற வழிவகுத்தது. இன்று ஈழத்தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர் தமிழர்களாக (தமிழ் டயஸ்பொறா) உள்ளனர். இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் கல்வி, வணிகம் என பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வளர்ச்சியடைந்து வருகின்றனர்.
கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அந்நாட்டு அரசியல் களத்தில் கால்பதித்து வெற்றிவாகை சூடுமளவுக்கு உயர்ந்துள்ளனர். அந்நாடுகள் பன்மைத்துவம், பன்முகத்தன்மை இதற்கு வழிகோலியிருந்ததோடு, இதனை பாராட்ட வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.
புலம்பெயர் யூதர்களுக்கு அடுத்தபடியாக மேற்குலக தமிழ் டயஸ்பொறா (மேற்குல புலம்பெயர் தமிழர்கள்) அனைத்துலக கணிப்பீட்டில் மதிப்பீட்டில் காணப்படுகின்றனர். புலம்பெயர் தமிழர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சி நிலையில் அவர்களுக்கான பொறுப்புநிலையும் காணப்படுகின்றது.
புலம்பெயர் இளைய தலைமுறையினரின் மூலவேராக இருக்கின்ற தமிழர் தாயகத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் பங்களிக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு. அனைத்துலக தளத்தில் தமிழர்களின் பொருளாதார சக்தியை மையப்படுத்தி வலுப்படுத்தி வளப்படுத்த தமிழர்களுக்கான ஒர் வங்கியை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |