இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு அங்குரார்ப்பணம்
கறுப்பு ஜூலை தினத்தில் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு என்கிற அமைப்பு இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறும்படி செய்யவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவும் என்ற அடிப்படையில் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு
அங்குரார்ப்பண நிகழ்வுக்கு பின்னர் ஏற்பாட்டாளர்கள் சார்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் அருந்தவபாலன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“இன அழிப்பு தொடர்பாக எங்களைப் பொறுத்தமட்டில் ஒருங்கிணைக்கப்படாத வகையில் தனித்தனியாக நாம் செயற்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் பக்கம் பலவீனமாக இருக்கின்றது. இந்த பலவீனத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக வாய்ப்பை நாங்களாகவே உருவாக்கிக் கொடுக்கின்றோம்.
அரசியல் கடந்து சகரும் ஒன்றிணைய வேண்டும்
அதை உணர்ந்து அரசியல் கடந்து சகரும் ஒன்றிணைந்து செய்யக் கூடிய வகையில் அரசியல் தலைவர்கள், சமய சமூக பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வகையில் எல்லோருமாக இணைந்து இந்த இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பை பலப்படுத்தி செயற்பட உள்ளோம்.
எதிர்கால மனித உரிமை கூட்டத்தொடருக்கு முன்னதாக தமிழ் மக்களினுடைய அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு பட்டயத்தை வெளியீடு செய்யவிருக்கின்றோம்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இந்தப் பட்டயம் என்பது இனப்படுகொலையை நிரூபிக்கின்ற வகையில் அதற்கு பொறுப்பு கூற செய்கின்ற வகையிலும் அதனூடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காணவும் இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் அனந்தி சசிதரன், தமிழ் மக்கள் கூட்டணியின் அருந்தவபாலன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், வலிவடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் சஜீவன் உள்ளிட்ட சிலர் நேரடியாகவும் மேலும் சிலர் இணைய வழியிலாகவும் பங்கேற்றுள்ளனர்.



