புழுக்களுடன் விற்பனை செய்யப்பட்ட பிஸ்கட்டுக்கள் - உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடையொன்றில் புழுக்களுடனும், பூஞ்சணம் பிடித்த நிலையிலும் விற்பனை செய்யப்பட்ட ஒருவகை பிஸ்கட்டுகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று(07.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உரிமையாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனினால் இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையில், புழுக்களுடனும், பூஞ்சணம் பிடித்த நிலையிலும் விற்பனை செய்யப்பட்ட ஒருவகை பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் பிஸ்கட்டை உற்பத்தி செய்தவர், விநியோகம் செய்தவர், விற்பனை செய்தவர், ஆகியோருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதில் உற்பத்தியாளருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்கு 46,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், இந்த தொகுதி இலக்கத்தையுடைய அனைத்து பிஸ்கட் பைக்கற்றுக்களையும் விநியோகம் செய்த அனைத்து கடைகளிலிருந்தும் உடன் மீளப்பெற்று அழிக்குமாறும் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.