பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல்
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை நிகழ்நிலையில் (Online) சரிபார்க்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய நிகழ்நிலை செயல்முறையின் மூலம், இலங்கை மக்கள் தங்கள் பிறப்பு, திருமணபதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்று உறுதிப்பாட்டிற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நிகழ்நிலை இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சான்று உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் விண்ணப்பிப்பது அல்லது சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் சேகரிப்பு ஆகியவற்றை நேரில் சமுகமளித்து மேற்கொள்ளும் தேவையை நீக்குகின்றது.
இதன் படி, பிறப்பு, திருமணபதிவு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் நடைமுறைகள் பின்வருமாறு:
- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் வழங்கப்பட்ட இணையநுழைவாயில் மூலம் நிகழ்நிலை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்: https://mfa.gov.lk/online-consular-services
- விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தேவையான பணம் செலுத்துவதற்கான இணைப்பைப் பெறுவார்கள்.
- சான்றிதழ் உருவாக்கம் மற்றும் சான்றுறுதிப்படுத்தலுக்கான கட்டணத்தை அந்த இணைப்பின் மூலம் செலுத்த வேண்டும்.
- கொடுப்பனவிற்கான பரிவர்த்தனையை முடித்த பிறகு, சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் (வாடிக்கையாளர் நகல்) விண்ணப்பதாரர் வழங்கிய முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
- வாடிக்கையாளர் நகல் தொடர்புடைய வெளிநாட்டு பணியகங்களின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- இது தொடர்பிலான சகல விசாரணைகளுக்கும், அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவை 011-2338812 அல்லது 0112-446302 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் authentication.consular@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |