சீனா வெடிக்கும் டைம் பாம்: பைடனின் கருத்தால் மீண்டும் சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போது சீனாவை வெடிக்க தயாராக இருக்கும் ஒரு ''டைம் பாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு நிதி திரட்டும் நிகழ்வு அந்நாட்டின் உட்டா நகரில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பைடன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வினையாற்றிய சீனா
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "சீனா ஒரு ''டைம் பாம்'' போல இருக்கிறது. ஏனென்றால் அந்நாட்டில் பல்வேறுபட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளன.
அவர்களின் பலவீனமான வளர்ச்சியின் காரணமாக சீனா தற்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இந்த விடயம் நல்லதல்ல, ஏனென்றால் பிரச்சினை ஏற்படும் போது, அதில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக அவர்கள் மேலும் மேலும் கெடுதல்களைச் செய்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
இதற்கும் முன்னதாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற மற்றுமொரு நிதி திரட்டும் விழாவில் ஜி ஜின்பிங்கை "சர்வாதிகாரி" என்று பைடன் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி பைடனின் இந்தக் கருத்துக்குச் சீனா கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தது.
வெடிக்கும் ''டைம் பாம்''
இரு நாடுகளுக்கும் இடையே முறுகளை ஏற்படுத்தும் வகையில் பைடனின் கருத்துகள் இருப்பதாகக் ஜி ஜின்பிங் கடுமையாகச் சாடினர்.
சீன பொருளாதாரம் இப்போது மிகப் பெரிய பிரச்சினையில் இருக்கிறது என்றும் அந்நாட்டின் தொழில்துறை தொடர்ந்து சரிந்து வருவதாகவும் சர்வதேச தரப்புக்களில் கூறப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்நாட்டின் பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது. ஊதியங்கள் உயராமல் இருப்பது, பொருட்களின் விலை சரிவு என பல காரணங்களால் சீனாவின் பொருளாதாரம் மிக மோசமாக நிலையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினைகளைக் குறிப்பிட்டே சீனா இப்போது ஒரு வெடிக்கும் ''டைம் பாம்'' என்றும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்றும் பைடன் பேசியுள்ளார்.
இந்நிலையில் சீனா மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், தான் சீனாவைக் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் சீனாவுடன் நல்ல ஒரு உறவை வைத்திருக்கவே விரும்புவதாகவும் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



