தீயில் சங்கமமானார் மனோஜ் பாரதிராஜா
புதிய இணைப்பு
மனோஜ் பாரதிராஜாவின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
மனோஜ் உடலுக்கு அவரது 2 மகள்களும் கொள்ளிக்குடம் தூக்கி இறுதிச்சடங்கு செய்தனர்.
மனோஜ் உடலுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 48. தமிழ் சினிமாவில் நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர் என பன்முகங்கள் காட்டியவர் மனோஜ் பாரதிராஜாவின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஆசைக்காக திரைப்படங்களை இயக்குவதிலும், தந்தையின் ஆசைக்காக படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்த மனோஜ், "வருஷமெல்லாம் வசந்தம்", "சமுத்திரம்", "அல்லி அர்ஜுனா", உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் இரண்டாவது நாயகனாகவும், "தாஜ்மஹால்", "ஈர நிலம்", "சாதுர்யன்" உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும், "மார்கழி திங்கள்" என்கிற படத்தை இயக்கியும் உள்ளார்.
பலரும் இரங்கல்
"ஈஸ்வரன்", "மாநாடு", "விருமன்" உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு சில நாட்கள் முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது வீட்டில் ஓய்வெடுத்தார்.
ஆனால் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் இப்போது அஞ்சலிக்காக நீலாங்கரையில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
இறுதி சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல்
இந்நிலையில் பாரதிராஜா குறித்து சில வருடங்களுக்கு முன்பு மனோஜ் அளித்த நேர்காணல் ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
அவர் தனியார் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அப்பா எத்தனை விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றிருந்தாலும் அதனை தனது தலைக்கு ஏற்றிக்கொள்ளவே மாட்டார்.
நீங்கள் சாதித்துவிட்டீர்கள் போதும் அப்பா என்று சொன்னால்; நான் சாதிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. அதற்கான தெம்பை கடவுள் எனக்கு கொடுத்திருக்கார். கடைசிவரை படம் இயக்குவேன் என்றுதான் சொல்வார்.
அவருக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் மகனாக பிறக்க வேண்டுமென்பதுதான் எனது ஆசை" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |