வெனிசுவேலா ஜனாதிபதி கைது நடவடிக்கையை வைத்து பந்தயம்: 400,000 டொலர் வென்ற அமெரிக்க இராணுவ சிப்பாய்
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் ரகசிய இராணுவ நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்து, அதன் மூலம் பந்தயம் கட்டி லட்சக்கணக்கில் பணம் ஈட்டிய அமெரிக்கச் விசேட படை சிப்பாய் ஒருவரை அந்த நாட்டுப் புலனாய்வு அமைப்புகள் கைது செய்துள்ளன.
அமெரிக்க இராணுவத்தின் விசேடப் படையில் (Special Forces) மாஸ்டர் சார்ஜென்ட்டாகப் பணியாற்றிய கேனான் கென் வான் டைக் (Gannon Ken Van Dyke), வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவைக் கைது செய்யும் ரகசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
வெனிசுவேலா ஜனாதிபதி கைது
இந்தத் திட்டம் தொடர்பான ரகசியங்களை வெளியே சொல்ல மாட்டேன் என அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
ஆனால், இந்த ரகசியத் தகவலைப் பயன்படுத்தி 'பொலிமார்க்கெட்' (Polymarket) என்ற கிரிப்டோகரன்சி பந்தயத் தளத்தில் அவர் பணம் முதலீடு செய்துள்ளார்.

மதுரோ எப்போது அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவார் மற்றும் அமெரிக்கப் படைகள் எப்போது வெனிசுவேலாவிற்குள் நுழையும் என்பது போன்ற கேள்விகளுக்கு ஆதரவாக டிசம்பர் 2025 மற்றும் ஜனவரி 2026 க்கு இடையில் சுமார் 34,000 டொலர் மதிப்புள்ள பந்தயங்களை வான் டைக் கட்டியுள்ளார்.
ஜனவரி 3ஆம் திகதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மதுரோ கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய பிறகு, வான் டைக் பந்தயத்தில் சுமார் 409,881 டொலர் லாபம் ஈட்டியுள்ளார்.
அரச ரகசியங்கள்
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதமானதும், தனது அடையாளத்தை மறைக்க வான் டைக் முயன்றுள்ளார்.
பந்தயத் தளத்தில் தனது மின்னஞ்சல் முகவரியை மாற்றியதுடன், கிடைத்த பணத்தை வெளிநாட்டு கிரிப்டோகரன்சி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

எனினும், புலனாய்வு அதிகாரிகள் அவரது இணையச் செயல்பாடுகளைத் துல்லியமாகக் கண்காணித்து அவரைக் கண்டறிந்துள்ளனர்.
ராணுவப் பணியைத் தவிர, வான் டைக் ஒரு வெற்றிகரமான ரியல் எஸ்டேட் தொழிலதிபராகவும் இருந்துள்ளார்.
வட கரோலினாவில் பல வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டுள்ள அவர். மதுரோ கைது செய்யப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு 340,000 டொலர் மதிப்பிலான புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் அரச ரகசியங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை, மோசடி, மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் வான் டைக் மீது சுமத்தப்பட்டுள்ளன.