பெலாரஸ் நாட்டுக்கு பயணமானார் அமைச்சர் விஜித ஹேரத்
பெலாரஸ் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாக்சிம் ரிஷென்கோவ் (Maxim Ryzhenkov) விடுத்த அழைப்பிற்கு இணங்க வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மே 12 முதல் 15 ஆம் திகதி வரை பெலாரஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 25-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த விஜயம் இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
இரு தரப்பு ஒப்பந்தங்கள்
மின்ஸ்க் (Minsk) நகருக்கான இந்த விஜயத்தின் போது அமைச்சர் ஹேரத் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவைச் சந்திக்கவுள்ளதுடன் பெலாரஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பெலாரஸ் குடியரசுடன் பல்வேறு துறைகள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் பல கையெழுத்திடப்படவுள்ளன.

மின்ஸ்க் நகரில் பெலாரஸ் தேசிய ஏற்றுமதி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மற்றும் சுற்றுலா மாநாட்டிலும் அமைச்சர் ஹேரத் உரையாற்றவுள்ளார்.
அத்துடன் அவர் பெலாரஸில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களையும் சந்தித்துக் கலந்துரைடவுள்ளார்.