சீனாவின் புதிய இன ஒற்றுமைச் சட்டம்: விமர்சனங்களை நிராகரித்தது பெய்ஜிங்!
சீனா அண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய "இன ஒற்றுமைச் சட்டம்" சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவலைகளை சீனா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
இந்த விமர்சனங்கள் அனைத்தும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் "தீங்கிழைக்கும் அவதூறுகள்" என்று சீனா சாடியுள்ளது.
இன ஒற்றுமைச் சட்டம்
கடந்த புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின்படி, சீனாவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு வெளிநாடுகளில் வசிக்கும் நபர்கள் அல்லது அமைப்புகள் யாரேனும் சீனாவின் "இன ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு" குந்தகம் விளைவித்தாலோ அல்லது "இனப் பிரிவினையை" தூண்டினாலோ, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க பெய்ஜிங்கிற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

திபெத்தியர்கள் மற்றும் உய்குர் முஸ்லிம்கள் உள்ளிட்ட 55 சிறுபான்மையினக் குழுக்களிடையே ஒரே தேசிய அடையாளத்தை உருவாக்குவதற்காக இந்த சட்டம் கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த புதிய சட்டம் தங்களை குறிவைக்கக்கூடும் என்பதால் தாய்வான் நாடு இதனால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
தாய்வானின் முதன்மை கொள்கை வகுப்புக் குழுவின் தலைவரான சியு சுய்-செங், இந்த சட்டத்தின் வரம்பு எல்லைகளற்ற உலகளாவிய ஒன்றாக இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள பெலாரஸ், கம்போடியா போன்ற நாடுகளுக்கு தாய்வான் மக்கள் பயணம் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில், அங்கிருந்து அவர்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் மனித உரிமைச் சாதனை
இந்த சட்டம் ஒட்டுமொத்த உலகமும் சீனாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கூறும் ஒரு பேரரசரின் ஆணை போல உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், இந்த சட்டம் அனைத்து இன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தவும் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

சில நாடுகள் தங்களின் அரசியல் லாபங்களுக்காக சீனாவின் மனித உரிமைச் சாதனைகளைக் கண்மூடித்தனமாக விமர்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாய்வான் விவகாரம் குறித்துப் பேசிய சீன அதிகாரிகள், சாதாரண தாய்வான் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை எனக் கூறினாலும், தாய்வானின் சுதந்திரத்திற்காகச் செயல்படுபவர்கள் மற்றும் நாட்டின் ஒற்றுமையைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர்.