சட்டவிரோத மின்சார வேலியால் காவு கொள்ளப்பட்ட இலங்கையின் மிகவும் அழகான யானை
அனுரதபுரம்- கலாவெவ தேசிய பூங்காவில் மிகவும் அழகான யானையாக கருதப்பட்டு வந்த தீக தந்து 1 என்ற யானை, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
இந்தநிலையில், உயிரற்ற உடலாக குறித்த யானை இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய பூங்கா கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
யானை தனது வழமையான வசிப்பிடமான கஹல்ல பல்லேகல சரணாலயத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது, ஆண்டியகல இங்குருவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டதாக மதிப்பிடப்பட்ட இந்த யானை, சீரற்ற காலநிலை காரணமாக, கலாவெவ நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால்,கஹல்ல பல்லேகல சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
தீக தந்து 1, கலாவெவ யானைகளில் மிக நீளமான தந்தங்களைக் கொண்ட யானையாக விளங்கியது இதன்படி இந்த யானை சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வந்தது.
இந்தநிலையில், குறித்த யானையின் உயிரைக் காவுக்கொண்ட சட்டவிரோத மின்கம்பியை பொருத்தியவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |