கரடித் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம்!
புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்குச் சென்ற விவசாயி கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 39 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும், கையிலும் கரடியின் கடி காயங்களுக்கு உள்ளான நிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாகண்டல் பகுதியில் வயல் விதைத்துள்ளதாகவும் அதனைப் பார்வையிட நண்பருடன் சென்றுவிட்டுத் திரும்பிய போது நடந்துவரும் பாதையின் அருகில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து கரடி தாக்கியுள்ளது.
நண்பரின் உதவியுடன் வயல் பகுதியிலிருந்து வெளியேறி புதுக்குடியிருப்பு மருத்துவமனை சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அண்மையில் பெய்த மழையால் காட்டில் வெள்ள நிலை வற்றாத நிலை காணப்படுகின்ற நிலையில் காட்டில் உள்ள யானை, கரடிகள் மேட்டு நிலங்கள் நோக்கி வந்து மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

