ட்ரம்பிற்கு எதிராக செய்தி வெளியிட்ட பி.பி.சி பிரதானிகள் பதவி விலகினர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்ட குற்றசாட்டின் அடிப்படையில் உலகின் முன்னணி செய்தி சேவைகளில் ஒன்றான பிபிசி செய்தி சேவையின் பணிப்பாளர் நாயகம் ரிம் டேவி மற்றும் செய்தி பிரிவு பிரதம நிறைவேற்று அதிகாரி டெபோரா டெர்னஸ் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
இவ்வாறான ஒரு பெரிய ஊடக நிறுவனம் ஒன்றின் அதி உயர்ந்த பதவிகளை சேர்ந்தவர்கள் செய்தி அறிக்கையிடல் தொடர்பில் இவ்வாறு பதவிகளை துறப்பது இதுவே முதல் தடவை ஆகும்.
பதவிகளை விட்டு விலகினர்
பனோரமா ஆவண படத்தில் நேயர்களை பிழையாக வழிநடத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேச்சுக்களை தொகுத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பணிப்பாளர் நாயகம் ரிம் டேவி கடந்த ஐந்து ஆண்டுகளாக பிபிசி செய்தி சேவையில் கடமை ஆற்றிய வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் தி டெலிகிராப் ஊடகம் தகவல்களை அம்பலப்படுத்தி இருந்தது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி என்பது போன்று வெளிப்படுத்தக்கூடிய காணொளிகள் திட்டமிட்ட அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பி.பி.சி ஊடகம் பக்க சார்பான அடிப்படையில் செய்திகளை அறிக்கை விட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெப்பிடல் ஹில் பகுதியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலும் இவ்வாறு திரிபு படுத்தப்பட்ட செய்தி அறிக்கை இடப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
டிரம்பின் இரண்டு வெவ்வேறு உரைகள் தொகுக்கப்பட்டு பிழையான கருத்து நேயர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிபிசி செய்தி சேவையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் செய்தி பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தங்களது பதவிகளை விட்டு விலகி உள்ளனர்.
எல்லா பொது நிறுவனங்களும் போல பிபிசியும் பிழையற்றது அல்ல. எப்போதும் வெளிப்படையாகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சில தவறுகள் நடந்துள்ளன, அதன் இறுதி பொறுப்பு என்னுடையது இதனால் பதவி விலகுவதாக ரிம் டேவி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பனோரமா விவகாரம் பிபிசிக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதால், நான் விலகுகிறேன் என டெபோரா டர்னஸ் தெரிவித்துள்ளார்.