சட்டங்கள் மாத்திரம் சமூக கலகங்களை கட்டுப்படுத்தாது: கே.கருணாகரன் (Photos)
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொதுப்புள்ளியை வைத்து சமூக ஐக்கியத்தை நோக்கிப் பயணித்தால் முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாய் இருக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் (K.Karunakaran) தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் அலிகார் தேசியக் கல்லூரியில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களும், முஸ்லிம்களும் பல விடயங்களிலே ஒன்றாக இணைந்து வாழ்ந்தவர்கள். விரும்பியோ விரும்பாமலோ சில காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளால் சற்று விலகி இருக்கின்றோம். சற்றுத்தான் விலகி இருக்கின்றோமே தவிர அது நீண்ட இடைவெளி கொண்ட விலகல் அல்ல.
முஸ்லிம்களும், தமிழர்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களிலே இலக்கிய விழா, கலை விழா என்பன நடத்தப்படுவது மிகவும் கச்சிதமான ஒரு ஏற்பாடாகும்.
பல்லின சமூகங்கள் வாழ்கின்ற இந்தியாவில் சமூகக் கலகங்கள் வந்தாலும் அவை நீண்ட இடைவெளியை ஏற்படுத்துமளவுக்கு விரிசல் உண்டாவதில்லை. சட்டம் மட்டும் சமூகக் கலகங்களை கட்டுப்படுத்தாது.
அதற்கும் மேலாக பல வழிமுறைகள் இருக்கின்றன. தொடர்பாடலும் தொழிநுட்பமும் அதில் பிரதான பங்கு வகிக்கின்றது. எந்த மையப்புள்ளியும் தொடக்கப் புள்ளியாகவும், முடிவுப் புள்ளியாகவும் இருக்க முடியும்.
சமூகங்களை இணைப்பதற்கு விளையாட்டு அரசியல் பொழுது போக்கு என்பவை இருந்தாலும், அவற்றின் மூலமாக மனக் கீறல்கள், மனக் கசப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் நிறைய உண்டு.
அரசியல் என்ற புள்ளியிலும் நாம் ஒன்றாகப் பயணிக்க முடியாதவாறு உணர்ச்சிகள் நிறைந்திருக்கின்றன. அரசியலை வைத்து சமூகங்கள் இணைவதிலும் அசாத்தியங்கள் நிறைந்திருக்கின்றன. எனவே பொதுவெளியில் நாம் இணைந்து கொள்வதற்கு ஏற்ற இடம் கலை, இலக்கியம் என்ற ஒன்றுதான் சாலச் சிறந்தது.
தமிழர்களும், முஸ்லிம்களும் கலையினூடாக பண்பாட்டு விழுமியங்கள்
ஊடாக ஒருங்கிணைந்து பயணிக்கலாம். சமூகங்களுக்கிடையில் ஏற்படும் மனக் கசப்புக்களை பெருப்பிக்காமல் ஆற்றுவதற்கு இத்தகைய கலாசார இலக்கிய விழாக்கள் உதவும் என தெரிவித்துள்ளார்.



