மட்டக்களப்பில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச பேருந்து உத்தியோகஸ்தர்கள் (Photos)
இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு அரச பேருந்து உத்தியோகஸ்தர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துசாலை சாரதி ஒருவர் நேற்று(18) இரவு தாக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியே அவர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து தடை
இதன்காரணமாக மட்டக்களப்பு சாலை ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்த அனைத்து பகுதிக்குமான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளது காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை அம்பிளாந்துறை நோக்கிச்சென்ற பேருந்தின் சாரதி மீது கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து நடத்துனர் உட்பட நான்கு பேர் இணைந்து இந்த தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றம் ஊடாக தண்டனைப்பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள நட்டத்தினை குறித்த தாக்குதல் நடாத்தியவர்களின் பேருந்து உரிமையாளரிடம் பெற்று வழங்குமாறு கோரியும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஐந்து முறைப்பாடுகள்
தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தாவிட்டால் நாளைய தினம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்துச் சாலைகளையும் மூடி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலை பகுதியில் முன்னரும் சாரதி மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஐந்து முறைப்பாடுகள் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையிலேயே நேற்றும் தமது சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் முன்னர் நடந்த சம்பவத்திற்கு பொலிஸார் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று சாரதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், முன்னெடுத்துவரும் பணி பகிஸ்கரிப்பு காரணமாக சாலைக்கு 18 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நட்டத்தினையும் தாக்குதல் நடாத்தியவர்களின் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று போக்குவரத்துச்சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கை
இதன்போது மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை சாலைக்கு சென்று அங்கு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேநேரம் தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் இந்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு நகரிலிருந்து தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளும் குறுந்தூர பயணம் மேற்கொள்ளும் பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |