மட்டக்களப்பில் பிரதேச சபைகளுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் (VIDEO)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச சபைகள், நகர சபைகளில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி பிரதேச சபைகளுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மண்முனை மேற்கு பிரதேச சபை
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் அமைந்துள்ள மண்முனை மேற்கு பிரதேச சபையில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாகவும், அமைய அடிப்படையிலான நியமனத்தை நிரந்தரமாக்குமாறு பிரதேச சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்முனை மேற்கு பிரதேச சபையில் 24 ஊழியர்கள் கடந்த 6 வருடகாலமாக நிரந்தர நியமனம் வழங்காமல் தற்காலிகமாக கடடையாற்றி வருகின்றனர்.
மேலும், தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு கோரி மண்முனை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சண்முகராஜாவிடம் மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்தனர்.
இந்த மகஜர் வழங்கும் நேரத்தில் பிரதேச சபை பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பிரசன்னமாயிருந்தனர்.
செய்திகள் : ருசாத்
ஏறாவூர் நகர சபை
உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் தம்மை சேவையில் நிரந்தரமாக்குமாறு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏறாவூர் நகர சபையின் முன்னால் இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் ஏறாவூர் நகர சபையில் கடமை புரியும் சுமார் 66 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தற்காலிக ஊழியர்களால் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ் நழிமிடம் கையளித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நகர சபைத் தலைவர் “இந்த ஊழியர்கள் மாதாந்தம் சுமார் பத்தாயிரம் ரூபாவுக்குக் குறைந்த தொகையையே ஊதியமாகப் பெறுகின்றனர்.
அதுவும் இவ்வூர் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இந்த மாதாந்தக் கொடுப்பனவை வழங்குகின்றோம். எனினும் அவர்கள் ஆற்றும் பணி அளப்பெரியது.
அதனால் இதற்கு முன்னால் கோலோச்சிய நல்லாட்சி அரசு இவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
அதேபோன்று இந்த அரசும் பாராமுகமாக இருந்து விடாமல் இந்த தற்காலிக ஊழியர்களை தமது தொழிலில் நிரந்தரமாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் பதிலீட்டு அடிப்படையில் சுமார் 940 ஊழியர்கள் நிரந்தர நியமனமின்றி சுமார் 8 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை ஊழியர்கள் பிரதேச சபையின் முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மண்முனைதென் எருவில் பற்று பிரதேச சபையில் 64 சுகாதார ஊழியர்கள் கடந்த 6 வருடகாலமாக அமைய அடிப்படையில் கடமையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமது நியமனத்தை நிரந்தரமாக்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர், பிரமதம், மற்றும் ஜனாதிபதி ஆகியோர் முன்வர வேண்டும் என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டதாவது,
நாங்கள் போரதீவுப்பற்று பிரதேச சபையில் ஆறு வருடங்களுக்கு மேலாக தற்காலிக அமைய மற்றும் பதிலீட்டு ஊழியர்களாகக் கடைமையாற்றி வருகின்றோம்.
இச் சபையுடைய வருமானம், சேவை மற்றும் ஏனைய ஒவ்வொரு செயற்பாடுகளிலும் எமது சேவைகள் அளப்பெரியது நாங்கள் எந்த நிலைமைகளிலும் காலம் நேரம் பாராது முழுமனதுடன் சேவையாற்றுவதுடன் சூழல் சுத்திகரிப்பு மற்றும் அனர்த்த நிலைமை காலங்களிலும் தற்போதைய கோவிட்-19 கொடும் தொற்றுநோய் நிலைகளிலும் எமது சுகாதாரத்தினையும் உயிரையும் துச்சமாக மதித்து பொது நல செயற்பாடுகளில் இப்பிரதேச சபையுடன் ஒன்றிணைந்து பாடுபட்டு உழைத்து வருகின்றோம்.
அத்துடன் மாதாந்த குறைந்த ஊதியத்தினை பெற்று வருகின்றபோதிலும் இப்பிரதேச சபையின் சேவை முன்னேற்றம் அபிவிருத்தி போன்றவற்றிற்கு அயராது உழைக்க தவறியதேயில்லை.
எமது ஒவ்வொரு ஊழியர்களினதும் குடும்பம் எங்களது குறைந்த மாதாந்த வருமானத்தைக் கொண்டு தற்பொழுது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்புக்கு முகம்கொடுத்து வாழ வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.
மேலும் நாங்கள் 6 வருடங்களுக்கு மேல் இவ்வாறு பாரிய சேவையை இச்சபைக்கு வழங்கியபோதிலும் இன்றுவரை எங்களுக்கான எந்தவித நிரந்தர நியமனமும் வழங்கபடாமையினால் எங்களை புறக்கனிப்பதாக உணர்வதுடன் உளரீதியான பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளோம்.
அத்துடன் எங்களில் மாறுபட்ட வயது உடையவர்களுக்கு இன்னும் கால நீடிப்பினால் நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல் நிலை எற்படும் என்பதனையும் தங்களின் மேலான கவனத்துக்கு அறியத்தருகின்றோம்.
ஆகவே எமது நிலைமையையும் தங்களது கவனத்தில் கொண்டு வயது மற்றும் எதிர்கால நன்மை கருதி எங்களுக்கு நிரந்தர நியமனத்தை மிக விரைவாக பெற்றுத் தருமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் : ருசாத்
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபை
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டும் என்னும் தலைப்பில் இன்றைய தினம் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச சபைகள், நகர சபைகளில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதுள்ள அரசாங்கத்தின் காலத்திலேயே தங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், ஊழியர்கள் நிரந்தரமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கடந்த நல்லாட்சிக் காலத்தில் தாங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகள் : குமார்
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபை
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு முன்பாகவும் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனியிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மகஜரைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தவிசாளர் ரஜனி,
எமது பிரதேச சபையில் அமைய அடிப்படையில் கடமை புரிகின்ற ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற கவனயீர்ப்பு போராட்டம் மிகவும் நியாயமானதாகும்.
அவர்களில் சுமார் 8 வருடங்களாக கடமையாற்றுகின்றவர்களுக்குக்கூட இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு இதே அரசாங்கத்திலுள்ள பிரதமர், அப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் வழங்கப்பட்ட தற்காலிக நியமனங்கள் கூட இன்னும் நிரந்தரமாகக்கப்படவில்லை.
180 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட எமது போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் மக்களுக்குரிய சேவையை நாம் வழங்குவதற்கு அமைய அடிப்படையில் இதுவரையில் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொழிலாளர்கள், நூலக உதவியாளர்கள், உள்ளிட்ட, ஊழியர்களின் நிரந்தர நியமனம் என்பது காலத்தின் கட்டாயமாக்கப்பட வேண்டியதாகும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
செய்திகள் : குமார் , ருசாத்