பிணை வழங்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் இன்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கைதான 6 பல்கலை மாணவர்களுக்கும் நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டபோதும், பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மட்டக்களப்பு - சித்தாண்டியில் பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களுக்கும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேச்சல் தரை பண்ணையாளர்களின் 52 வது நாளான இன்று(05.11.2023) தொடர் உண்ணாவிரத
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்
ஒன்றினைந்து சித்தாண்டி முருகன் ஆலையத்திற்கு முன்பாக ஆர்பாட்ட பேரணி
ஆரம்பித்து பண்ணையாளர்களின் போராட்ட இடத்திற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்கு பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ஆர்பாட்டம் முடிவுற்ற பின்னர் மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தை நோக்கி பிரயாணித்த போது பின்னால் சென்ற சந்திவெளி பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதன்போது பிணையெடுப்பவர்கள் தமது இருப்பிடத்தினை கிராம சேவையாளர் உறுதிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த உறுதிப்படுத்தலை பெறுவதற்கான நேரம் நீடித்த காரணத்தினால் குறித்த ஆறு மாணவர்களும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டடுள்ளனர்.
மேலும், குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்று காலை
சந்திவெளி பொலிஸாரினால் கோரப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அது
நிராகரிக்கப்பட்டதாக சட்டத்தரணி ஜெகன் தெரிவித்துள்ளார்.
செய்தி - சரவணன், குமார்
மூன்றாம் இணைப்பு
மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏறாவூர், சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சட்டத்தரணிகளும், அரசியல்வாதிகள் சிலரும் அங்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்திவெளி பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
போராட்டம் முடிந்து திரும்பும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்து சந்திவெளியில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு, மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேரும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டக் களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதே என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கலகமடக்கும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியளார் தெரிவித்துள்ளார்.