மட்டக்களப்பில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி செயற்படும் பொலிஸார் : மக்கள் விசனம் (Video)
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் குடியேறி வெளியேற்றப்பட்ட 380 குடும்பங்களையும் மீண்டும் அங்கு குடியேறுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் பொலிஸார் அதை மதிக்காது செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் சட்டவிரோதமாக காணியை கையடக்கியவர் பொலிஸாருடன் இணைந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் நீதிமன்ற தீர்ப்பை மீறி பொலிஸார் அராஜகம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த காணி பகுதியில் நேற்று (04.12.2023) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு
சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடி தோனா ஜீவநகர் பகுதியில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக காணி இல்லாத 380 குடும்பங்களைச் சேர்ந்த வறிய மக்கள் அந்த பகுதியிலுள்ள காணியின் பற்றைக்காட்டை வெட்டி துப்பரவு செய்து குடில் அமைத்து அதில் தங்கி பயிர் செய்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த பகுதியில் உள்ள காணி மாபியாவைச் சேர்ந்த ஒருவர், அதனை தனது காணி என ஆவணத்தை தயாரித்து சந்திவெளி பொலிஸாருடன் இணைந்து அந்த மக்களின் குடிசைகளுக்கு தீவைத்து, வேலிகளை பிடுங்கி அவர்களை வெளியேற்றியுள்ளாதாக குறித்த மக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும், சிலரை பொலிஸ் அதிகாரத்தினால் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்து அவர்களை அச்சுறுத்தியுள்ளனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த மக்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சந்திவெளி பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை இந்த காணி தனது எனவும் அங்கு குறியேறியவர்களை வெளியேற்றுமாறும் காணி மாபியாவை சேர்ந்த மேற்கூறிய நபர் பொலிஸாரிடம் கோரிய நிலையில், குடியேறியவர்களுக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர் எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மக்கள் அச்சம்
இந்நிலையில், குறித்த மக்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பிறேம்நாத் முன்னிலையாகிய நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு இந்த காணியை உரிமை கோருபவருக்கு சொந்தமானது அல்ல எனவும் வெளியேறியவர்களை மீள குடியேறுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தீர்பளித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின் பின்னரும் பொலிஸார், குறித்த காணியில் மீண்டும் துப்பரவு பணிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வது அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தொடர்ச்சியாக காணி மாபியாவுடன் சேர்ந்து மீண்டும் குடிசைகளை பக்கோ வாகனத்தினால் உடைத்து தள்ளி அராஜகம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை (04.12.2023) சிரேஷ்ட
சட்டத்தரணி பிறேம்நாத் முன்நகர்வு விண்ணப்ப பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான் பொலிஸாரின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளார்.
மேலும், அந்த காணிப்பகுதிக்கு பொலிஸார் செல்ல கூடாது எனவும் அதில் வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் குடியேறுமாறும் நான்காவது தடவையாக தீர்ப்பளித்துள்ளார்.
இருந்தபோதும் நீதிமன்ற தீர்ப்பை மீறி மீண்டும் சந்திவெளி பொலிஸார் காணி மாபியாவுடன் இணைந்து அராஜகம் செய்வார்கள் என அச்சமடைந்துள்ளோம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |