மட்டக்களப்பு - சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வு விரைவில்..!
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்த நிலையில் இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்டவர்கள் குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்டம் கடந்த நல்லாட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டாலும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் அந்த பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சட்ட விரோத செயற்பாடுகள்
நல்லாட்சிக்காலத்தில் முறையான தெரிவுகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த பகுதியில் 139க்கும் அதிகமான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் 30 வீடுகளிலேயே மக்கள் குடியிருப்பதாகவும் ஏனைய வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்ட காலம் தொடக்கம் முறையான வீதிகள், குடிநீர்வசதிகள்,வடிகான் வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் குறித்த பகுதி மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் பெருமளவான வீதிகள் மணல் வீதிகளாக காணப்படுவதனால் போக்குவரத்துச்செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கடல் அருகில் காணப்படும் நிலையில் சுனாமி போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படும்போது கடல் பகுதியை நோக்கியே ஓடும் நிலை காணப்படுவதாகவும் மாற்றுவழி இல்லாத நிலையே உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
புன்னைக்குடா-பாலமீன்மடு பிரதான வீதியை ஒட்டியதாக சத்துருக்கொண்டான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே மக்கள் தமது வீடுகளுக்கு வந்து வதிவதற்கு தயங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அச்சத்தில் மக்கள்
பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் நீண்டதூரம் செல்லவேண்டிய நிலையில் பொதுப் போக்குவரத்துகள் எதுவும் இல்லாத நிலையில் பிரதான வீதியில் செல்லுவோரை நிறுத்தி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் நிலைமையே காணப்படுவதாகவும் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு வேறு நபர்களுடன் அனுப்பிவிட்டு அச்சத்துடனேயே இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் ஆகியோர் குறித்த பகுதியில் நிலவும் தற்காலிக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.
தற்காலிக வீதிகளை புனரமைப்பதற்கும் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இங்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று கைவிடப்பட்ட வீடுகளின் மீளகுடியமர்த்தவும் அப்பகுதியில் காணப்படும் குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விடுத்தார்.
அத்துடன், எதிர்வரும் வரவு செலவு திட்டம் ஊடாக நிரந்தரமான வீதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












