மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பி. சீ.ஆர் இயந்திரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றினை எதிர்கொள்வதற்கு மருத்துவ வசதிகளை அதிகரிப்பதற்கு தேசிய கோவிட் செயலணி விடுத்த வேண்டுகோள் அடிப்படையில் பல்வேறு உதவிகள் பொது அமைப்புகளினால் வழங்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட கோவிட் செயலணி விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மலேசிய நாட்டில் உள்ள தன்னார்வ அல்லாஹ் பவுண்டேஷன் என்னும் அமைப்பினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பி. சீ.ஆர் இயந்திரம் உட்பட சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
இது தொடர்பான நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
அத்துடன் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவுக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியில் கட்டில்கள் மற்றும் மெத்தைகள், விரிப்புகள் வழங்கப்பட்டு அதற்கான ஆவனங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கோவிட் செயலணியின் தலைவர் மேஜர் ஜெனரல் கொஸ்வத்த, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் தலைவர் சிவஸ்ரீ சிவபாலன் குருக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


