மட்டு மாநகர சபை வழங்கிய சுகாதார தொண்டர் நியமனம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மாநகரசபை தாதியர் நியமனங்கள் தொடர்பான முறைகேடு குறித்து கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி குற்ற பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஈ.பி.டிபி. கட்சியின் வாராந்த ஊடக மாநாடு பாலைமீன்மடுவில் உள்ள காரியாலயத்தில் நேற்று (16) இடம்பெற்றது.
கொடுப்பனவுகள்
இதன்போது கருத்து தெரிவித்த அந்தனிசில் ராஜ்குமார், "மட்டு மாநகர சபையின் 16ஆவது அமர்வில் சபை உறுப்பினர்கள் தங்களுக்கு தெரியாமல் 16 சுகாதார தொண்டர்களுக்கு முறையற்ற விதத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டதாக தங்களது ஆதங்கங்களை வெளியிட்டனர்.

இது ஊடகங்கள் ஊடாக அறியக்கூடியதாக இருந்தது. இதனை அறிந்த பின்னர் தகவல்களை தேடிய போது சுகாதார தொழிலாளர்கள் என நியமனங்கள் வழங்கி அவர்களுக்கு மாநகரசபைக்குள்ளும் வாசிகசாலைக்குள்ளும்; கடமையாற்றுவதற்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாகவும் மாநகர சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு அங்கு மீண்டும் ஓப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டதுடன் மாமாங்க ஆலய வருடாந்த உற்சவ காலத்தில் அவருக்கு மேலதிகமாக தினம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை வழங்கி ஒரு திணைக்களத்தில் ஒருவருக்கு 3 வேதனங்கள் வழங்கிய முறைகேடு உட்பட 5 மோசடிகள் தொடர்பாக கொழும்பிலுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.