விமலின் சத்தியாக்கிரகப் போராட்டத்தை விமர்சித்துள்ள கந்தசாமி பிரபு எம்.பி
ஹரிணி அமரசூரியவை தாக்குகின்ற விதமாக, குறிப்பாக பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கல்வி சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டிய தேவை எழுந்திருந்தது. கடந்த காலங்களிலே பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், கல்வியை நிறைவு செய்து வெளியேறியதன் பின் அவர்கள் தொழில் வாய்ப்புக்காக ஏங்கி நிற்பதையும் கருத்திற் கொண்டு பிரதமர் ஹருணி அமரசூரிய அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
கல்வி சீரமைப்பு
பிள்ளைகள் எதிர்காலத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக தற்போதே அவர்களின் கல்வியிலே சீர்திருத்தங்களை மேற்கொண்டு அவர்களை இந்த நாட்டில் சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும், தொழில் வாய்ப்புக்காக ஏங்கி நிற்கக் கூடியவர்களாக அல்லாமல் சிறந்த சமூகப் பாங்கானவர்களாக மாற்றுவதற்காகவே இந்த கல்வி சீரமைப்பினை உருவாக்கியிருந்தோம்.
சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கள் 11 வருட பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறும் போது தொழில் வாய்ப்பு இல்லாத நிலையில் சமூக சீரழிவுக்கு உள்ளாகும் நிலைமையைக் காணமுடிகின்றது. அதன் நிமித்தம் ஆரம்ப கட்டமாக தரம் ஒன்றிலும் தரம் ஆறிலும் இந்த சீரமைப்பை கொண்டு வந்திருக்கின்றோம்.

அடுத்ததாக அவர்கள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறும் போது ஒரு தொழில் நிலைமையை எய்தக் கூடிய வகையில் இந்த முறைமை மாற்றத்தைச் செய்திருக்கின்றோம். இதன் நிமித்தம் தொழில் கல்வியொன்றையும் உள்வாங்கியுள்ளோம்.
செயற்திட்டங்கள் முன்னெடுப்பு
இதன் மூலம் உயர் கல்விக்குச் செல்ல முடியாதவர்கள் தொழில் வாய்ப்பிற்குச் செல்லக் கூடிய விதமாக இதனை மாற்றியமைத்துள்ளோம். இத்தோடு தொழில் முறை நிறுவனங்களை உருவாக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இருந்த போதிலும் பல காலங்களுக்குப் பின் ஒரு பெண் பிரதமாராக எமது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஹரிணி அமரசூரியவை தாக்குகின்ற விதமாக குறிப்பாகப் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக விமல் வீரவன்ச சத்தியாக் கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்.
அவரது கருத்துகளும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவே அமைந்திருக்கின்றது. அதே போன்று பிரதமரைப் பதவி நீக்க வேண்டும் என்று அவர்கள் அந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள். பதாதைகளில் மாத்திரம் தான் சத்தியாக் கிரகப் போராட்டம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |