மயிலத்தமடு பிரச்சினை தொடர்பில் சுமந்திரன் எழுப்பிய கேள்விக்கு அரச தரப்பின் பதில்
மட்டக்களப்பு, மயிலத்தமடு பகுதிக்குக் காட்டு வழியாக சென்றவர்கள் அப்பகுதியை கமரா மற்றும் தொலைபேசி மூலம் படம் பிடித்துள்ள நிலையில்தான் அப்பகுதியிலுள்ள ஒரு தரப்பினர் அவர்களைத் தடுத்து வைத்துள்ளார்கள். எனினும் அந்தப் பிரச்சினை மிகவும் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டதாகவே நான் அறிந்து கொண்டேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் கேள்வி
நாடாளுமன்றத்தில் நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும்போது, “மட்டக்களப்பு, மயிலத்தமடு - மாதவனைப் பகுதி பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிவதற்காக அவ்விடத்துக்குச் சென்ற சர்வமதத் தலைவர்கள் அடங்கிய குழுவினரை அங்குள்ள ஒரு தரப்பினர் சுமார் ஆறு மணித்தியாலங்கள் தடுத்து வைத்துள்ளார்கள்.
இந்து மத குரு மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், 4 மணிநேரமாக பொலிஸார் அவ்விடத்துக்குச் செல்லவில்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பதிலளிக்கையிலேயே குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
டிரான் அலஸின் பதில்
அவர் மேலும் தெரிவிக்கையில், "மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதிக்கு ஒரு தரப்பினர் காட்டு வழியாக அனுமதியற்ற வகையில் சென்றுள்ளார்கள். அவர்கள் அப்பகுதியைக் கமரா மற்றும் தொலைபேசிகள் ஊடாகப் படம் பிடித்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில்தான் அப்பகுதியிலுள்ள ஒரு தரப்பினர் இவர்களைத் தடுத்து வைத்துள்ளார்கள். சர்வமதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பொலிஸ் நிலையத்துக்கு 14 கிலோமீற்றர் தூர இடைவெளியுள்ளது.
இதனால்தான் பொலிஸார் அங்கு செல்லக் காலதாமதமானது. எனினும், இந்தச் சம்பவத்தை அறிந்தவுடன் பொலிஸார் அவ்விடத்துக்கு சென்று, நிலைமையை சுமூகநிலைக்குக் கொண்டு வந்ததாக நான் அறிந்துகொண்டேன்.
அங்கு பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை என வணபிதா ஒருவரும் பிக்கு ஒருவரும் கூறினார்கள். இந்தச் சம்பவம் குறித்து நான் அறிக்கை பெற்றுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




