மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெளிச்சவீடு
இலங்கையில் மிக உயரமான வெளிச்சவீடுகளில் ஒன்றான மட்டக்களப்பு (Batticaloa) முகத்துவார பாலமீன் மடு வெளிச்சவீடு சுமார் 30 வருடங்களுக்கு பின் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இதனை கையளிக்கும் நிகழ்வானது, நேற்று (20.07.202) மாலை நடைபெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனால் (s. Viyalendiran) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) ஆகியோரிடம் இந்த வெளிச்சவீட்டினை புனரமைக்கும் நடவடிக்கை தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடு
இதற்கிணங்க வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாநகர சபையினால் குறித்த வெளிச்சவீடு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
1913ஆம் ஆண்டு கட்டப்பட்ட, 111 வருடங்கள் பழமையான இந்த வெளிச்சவீடானது கடற்றொழிலாளர்களின் கடற்கரை விளக்காகவும், வெளிநாட்டவர்களின் சுற்றுலா தளமாகவும் காணப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது இந்த வெளிச்சவீடு, சுமார் 7.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
மாநகர ஆணையாளர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற வெளிச்ச வீடு கையளிக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கடற்றொழில் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |