மைத்திரியின் சொத்துக்குவிப்பு தொடர்பில் நீதிமன்றில் வெளியான தகவல்
தாம் ஜனாதிபதியாக இருந்த போது வழங்கப்பட்ட “ஸ்வர்ணபூமி” உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithiripala Sirisena) கையகப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவர், உயர்நீதிமன்றில் சமர்ப்பித்த சொத்துப் பிரகடனத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன கையகப்படுத்திய பத்து சொத்துக்களில் ஐந்து வீடுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
முன்னதாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்று, 100 மில்லியன் ரூபாய் நட்டஈட்டை செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மைத்திரிபாலவுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனினும் அந்த நட்டஈட்டு பணத்தை தீர்ப்பதற்கு மேலதிக காலத்தை, மைத்திரிபாலவின் சட்டத்தரணிகள் அவகாசமாகக் கோரிய போதே, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன இந்த விடயம் தொடர்பில் கேள்விகளை தொடுத்தார்.
தாக்குதல்களுக்கு உள்ளானவர்களுக்காக முன்னிலையான, சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஜனாதிபதி பதவியை வகித்துக்கொண்டு எப்படி இவ்வளவு சொத்துக்களை ஜனாதிபதி ஒருவர் குவிக்க முடியும் என வினவினார்.
இந்த தகவல் ஊழலை வெளிப்படுத்துவதாகக் கூறிய அவர், விசாரணைக்கு உத்தரவிடுமாறும் பாதிக்கப்பட்டோர் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோரின் சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகையை தமது கட்சிக்காரர்கள் முழுமையாக செலுத்தியுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.
கூடுதல் கால அவகாசம்
முன்னதாக, பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன், ரூபாய்களும் மெண்டிஸிற்கு 10 மில்லியன் ரூபாய்களையும்; நட்டஈடாக செலுத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தமக்கு உத்தரவிடப்பட்ட 79 மில்லியன் ரூபாய்களில் இதுவரை 1.9 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே செலுத்தியுள்ளார் என்று நீதிமன்றில் குறிப்பிடப்பட்டது.
அத்துடன், அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன, தமக்கு உத்தரவிடபபட்ட 75 மில்லியன் ரூபாய்களில் இதுவரை 4.1 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே செலுத்தியுள்ளதாகவும் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
இந்தநிலையில், நட்டஈடுகளை வழங்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதிகள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதிக்குள் நட்டஈட்டுத் தொகையை முழுமையாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |