மட்டக்களப்பில் 54வருடங்களுக்கு பின்னர் திறந்துவைக்கப்பட்ட அரச மருந்து விற்பனை
மருந்து என்ற பெயரில் உப்புநிரைக்கொண்டுவந்து மக்களுக்கு வழங்கி மக்களை மரணிக்கசெய்து அதன்மூலம் பணம்சம்பாதிக்கும் யுகத்தினை முடிவுக்குகொண்டுவந்து தற்போது மக்கள் நலன்சார்ந்த விடயங்களை ஆரம்பித்திருக்கும் நிலையிட்டு சந்தோசமடைகின்றோம் என பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 54வருடங்களுக்கு பின்னர் அரச ஒசுசல மருந்து விற்பனை நிலையம் நேற்று(31) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் கோரிக்கை
அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 1981ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு ஒசுசல நாடெங்கிலும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சியினால் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் ஒசுசல ஒன்று திறக்கப்படவேண்டும் என காலம்காலமாக வந்த ஆட்சியாளர்களிடம் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் அரசியல்வாதிகளும் கோரிக்கையினை முன்வைத்தபோதிலும் இதுவரையில் அரச ஒசுசல திறக்கப்படாத நிலையே இருந்துவந்தது.
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாண மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கும் நோக்குடன் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரு முகமாகவும் இந்த மருந்தக கிளை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு –திருகோணமலை வீதியில் கோட்டைமுனையில் இந்த ஒசுசல அரச மருந்துவிற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மருந்து விற்பனை நிலையம்
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் முழு முயற்சியினால் இந்த விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் சி.விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.அருள்ராஜ்,தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,மருந்தாக்கல் கூட்டுத்தாபன ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் இதுவரை காலமும் மருந்துகளை தனியார் மருந்தகளில் அதிக விலைகொடுத்துவாங்கிவந்த நிலையில் அரச ஒசுசல மருந்து விற்பனை நிலையங்களில் மருந்துகளை கொள்வனவுசெய்வதற்கு அம்பாறை,பொலநறுவை போன்ற தூர இடங்களுக்கே செல்லவேண்டிய நிலையிருந்தது.
இந்த நிலையில் இந்த மருந்து விற்பனை நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள மக்கள் நன்மையடைவார்கள் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திரா, இந்த நிகழ்வினை ஒரு வரலாற்றுசிறப்புமிக்க நிகழ்வாகவே பார்க்கின்றேன்.
1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இந்த பிரதேசத்திற்கு வருவதற்கு 54வருடங்கள் தேவைப்பட்டுள்ளது என்றால் அது இந்த நாட்டில் உள்ள ஒரு துரதிர்ஸ்டவசமான நிலைமையாகவே பார்க்கவேண்டும்.
இது சாதாரணமாக நாங்கள் கடந்துசெல்லக்கூடிய விடயங்களும் அல்ல. இது தொடர்பில் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபுவும் அடிக்கடி பேசிக்கொண்டதுடன் இது தொடர்பில் சுகாதார அமைச்சர் நளீந்தவுடனும் பேசியிருந்தோம்.
வங்குரோத்து நிலை
அது தொடர்பில் அவர் மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவரிடமும் இது தொடர்பில் கூறியிருந்தார்.
இங்குமட்டுமல்ல திருகோணமலை,வவுனியா,மன்னார் ஆகிய இடங்களிலும் இதனை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுஇத்துடன் நிறைவுபெறும் விடயமல்ல. இதுபோன்ற மருதகங்களை இந்த பகுதிகளில் திறந்துவைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகும்.
தொழில்நுட்பரீதியாக வளர்ச்சிநிலையினையடைந்துவரும் இந்த யுகத்தில் நாங்கள் இவ்வாறான பெரியளவிலான மருதங்களை அனைத்து இடங்களிலும் அமைக்கவேண்டிய தேவையுள்ளது. இந்த நாட்டினை நாங்கள் பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியிலேயே நாட்டினை பொறுப்பேற்றோம்.
வங்குரோத்து நிலையினை அடைந்திருந்த நாடு,பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்கொண்ட சந்தித்த நாடு,பல்வேறுபட்ட தடைகளை சந்தித்த நாட்டினையே நாங்கள் பொறுப்பேற்றிருந்தோம்.
இன்று அந்த தடைகளையெல்லாம் கடந்து நாட்டினை கட்டியெழுப்பிவருகின்றோம். கடந்தமாதம் முதல் கடந்த ஆட்சிக்காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறுபட்ட ஊழல்மோசடிகளை தேடிக்கண்டுபிடித்து நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் அதேவேளையில் மக்களுக்கு விளங்கும் வகையிலான அபிவிருத்திப்பணிகளையும் முன்னெடுத்துவருகின்றோம்.